மாற்றுத்திறனாளிகள் கொரோனா நிவாரணத் தொகை ரொக்கமாக ரூ.1000 பெற்றுக்கொள்ளலாம்

மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தகவல்

கோவை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் கொரோனா நிவாரணத் தொகை ரொக்கமாக ரூ1000 பெற்றுக்கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
கொரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கியும், பொருளாதார மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தற்போது 31.7.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 ரொக்க நிவாரண தொகையினை அவரவர் வீட்டிலேயே வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நிவாரணத்தொகையை பெற்றுக்கொள்ளலாம். நிவாரணத் தொகை அந்தப் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வழங்கப்படும்.

நிவாரணத் தொகையினை பெறுவதற்கு அசல் தேசிய அடையாள அட்டை காண்பித்தும், அதன் நகலினை கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்தும் நிவாரணத் தொகை ரூ.1000 பெற்றுக்கொள்ளலாம். விநியோக படிவம் பூர்த்தி செய்ய தேவையான விவரங்களை மாற்றுத்திறனாளிகள் – பாதுகாவலாகள் அளிக்க வேண்டும். அளிக்கப்படவேண்டிய விபரங்கள் தனி நபர் சம்மந்தப்பட்ட விவரம், கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு, தேசிய அடையாள அட்டை மற்றும் UDID விண்ணப்ப நிலை ஆகியவை ஆகும். அரசு தேவையான நிதியினை ஒதுக்கி உள்ளதால் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நிவாரணத் தொகை விடுபடாமல் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.