கொங்குச்சீமை செங்காற்று – 13

பணத்தை மூணு பங்காகப் பிரிக்கச் சொல்லுங்க!

 

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை

சூர்யகாந்தன்

 

கூலி கொறைச்சலாத்தா இதுல கெடைக்குது” என்று சுப்பையனிடத்தில் ஆடுகள் மேய்க்கும் வேலையிலிருந்த இரண்டு பையன்கள் ‘கட்டிட வேலைல நெறையச் சம்பாதிக்கலா’ மெனச் சென்றனர். எதிர்பார்த்தாற்போல் அது முடியாததால் திரும்பி வந்துவிட்டனர்.

தனக்கும் ஆட்கள் தேவையாயிருந்ததால் அவர்களையும் சேர்த்துக் கொண்டான்.”கிருமமா கூடவே இருந்தீங்கன்னா உங்களுக்கு அனுகூலந்தான்! நாள் கூலி போட்டுக் குடுக்கறேன்.

வெளிப்பக்கம் பட்டி புடிக்கிற சீசனுக வந்துச்சுன்னா சோறு தண்ணிக்கும் அங்கங்கே ஏற்பாடு பண்ணிக்கலாம். வருசத்துக்கு ஒரு ஆடு உங்களுக்கு சொந்தம் பண்ணிடறேன். அஞ்சு வருசத்துக்கும் பெறகு, அஞ்சாறு உருப்படிகளோட உங்க பட்டியின்னு நீங்க பிரிச்சு பேய்ச்சுக்கலாம். உங்க வேய்க்கானத்தை வெச்சுப் படிப்படியாக பெருசு பண்ணி இப்பிடிப்பட்ட பெரிய மந்தையா ஆக்கிப் போடுவோம்” என அவர்கள் முன்னேறுவதற்கும், இந்தத் தொழில் அபிவிருத்தி ஆக வேண்டியதற்கும் சுப்பையனின் மனம் விசாலமாக ஆசைப்பட்டது. ஆலோசனை சொன்னது.

ஆனால் விசுவாசத்தோடு விடாப்பிடியாக இந்தத் தொழிலிலேயே இருப்பவர்கள் தான் அகப்படுவது அரிதாக இருந்தது. ஜனப் பெருக்கமும் அதற்குத் தகுந்தாற்போல் பற்பல தொழில்களின் வளர்ச்சியும் குக்கிராமங்களையேல்லாம் சிறுசிறு நகரங்களின் சாயல்களுக்கு மாற்றிக் கொண்டிருப்பதை சற்று உற்றுக் கவனித்தால் நன்றாகவே உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

குரும்பபாளையத்து வயற்காடுகளில் ஒரு மாதக் கெடுவுக்குச் செம்மறியாட்டுப் பட்டி போடுகிற வேலை இவனைத் தேடிக் கொண்டு வந்தது. “மூணாம் வருசம் வந்து புடுச்சுக் குடுத்துப் போட்டு வந்தது! எங்க தவணைக்கு ரெண்டு வருசத்துக்கொருக்கா பட்டி போடாமல் எந்த வெள்ளாமையும் மாத்திச் செய்யறதில்லெ. போன வருஷம் எதேதோ தொந்தரவுகல்லெ உங்களுக்குச் சொல்லியுடுறது நின்னு போச்சு.”

இவனிடம் வந்தவர்.”வர்ற வெள்ளிக்கிழமைல இருந்தே ஆரம்பிச்சுடுங்க.” என நாளையும் குறிப்பிட்டு இவனிடம் ஒப்புதல் வாங்கிக் கொண்டு போனார். வந்து சேர்வதாக இவனும் சம்மதம் சொல்லி அனுப்பி வைத்தான்.

“…அங்கெ போனோம்னா அப்புறம் பக்கத்தாலெ இருக்குற வேடப்பட்டி, வீரகேரளத்து வயல்கள்லெயும் மாத்தி மாத்திக் கூப்புடுவாங்க! என்னொ அந்தப் பக்கங்கள்ல இங்கெத்த மாதிரி மேவுச் சவுகரியம் இருக்காது. தண்ணிச் சவுகரியத்துக்கு கொறச்சல் இல்லெ! வயலு, தோட்டங்காட்டு ஓரம்பாறங்கள்லெ பதனமாப் பாத்துதா ஆடுகளே மேய்க்கோணும்.”

“ரெண்டு நாளைக்கொருக்கா ஊட்டுக்கு வந்துட்டும் கூட போயிடலாம். பசங்களை வாரத்திக்கொருக்கா விடுப்புக் குடுத்து ஊருக்கும் போயிட்டு வரச் சொல்லுலாம்” என அங்கெ செல்வதற்கான திட்டத்தைக் கணக்கிட்டபடி வந்தான் சுப்பையன்.

பட்டி அடைக்கும் படல்களை வண்டியேற்றி அனுப்ப வேண்டும்! கொடப்புகளையும் சரி செய்து தயாராக்க வேண்டும்! நாலைந்து ஆடுகள் ஈற்றெடுக்கும் தருணத்தில் இருந்தன.

பட்டி அடைத்துக் ‘கிடை’ போடும் பணிக்கு வெளியூர் செல்ல வேண்டிருப்பதைக் கண்ணாத்தாளிடம் சொல்லுவதில் சற்றுச் சங்கடம் ஏற்படத்தான் செய்தது. இருப்பினும்,”ரெண்டு நாளைக் கொருக்கா இங்கெ வந்துட்டுப் போயிறலாம்! அவ்வளவு ஒண்ணும் தூரம் எல்லாம் இல்லே” என அவன் தெரிவித்த போது அவளுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது.

“இப்பத்தா கண்ணாலம் ஆன புதுமாப்பிளெ! அதுக்குள்ளெ ஊரு தங்கற துக்குங்கூட இல்லெபாருன்னு சொல்றவிக சொல்லீட்டுத்தா இருப்பாங்க. நம்ப பொழப்பெ  நாம பார்க்குறதுல தப்பொண்ணும் கெடையாது புள்ளே..”

அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு தன்னுடைய யோசனைகள் சிலவற்றைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாகவும் இது தோணியது! இவர்களைத் தவிர வீட்டிலும் ஒருத்தரும் இல்லை.

“…ஏனுங்கொ நானொண்ணு உங்ககிட்டெ கேக்கறே”…

“கேளு ..”

“உங்க அண்ணதம்பிகள்லெ  நீங்க ஒருத்தர்தா இந்தச் செம்மறியாடுகலெ மலகுமுலெல்லாம் மேய்ச்சுட்டு சிரமப் படறீங்கொ ..! மித்தவங்க ரெண்டு பேரும் அவுங்கவுங்க வேலைகளெ பாத்துட்டு இருக்காங்கொ! ஆனா, இந்த ஆடுக மூலமா வர்ற வரும்படி மட்டும் இந்தக் குடும்பத்துக்குப் பொதுவுன்னு சேருது. உங்களுக்கினு இதுல எந்த அனுகூலமும் கெடையாது”.

ஏங்கெடையாதுங்கறே புள்ளே..?”

“சின்னப்பையன்ல புடுச்சு இந்த ஆடுகளெ நீங்கதான் மேய்ச்சு இத்தனை உருப்படிகளெ பட்டி பெருக்கியிருக்கீங்கனு எல்லோருக்கும் தெரியுமில்ல! அப்படியிருக்க உங்களுக்குன்னு தனியா எதுனாலும் சம்பாத்தியம் சேர்த்தி வெச்சிருக்கீங்களா? சொல்லுங்க”

“ஏ இப்பிடிக் கேக்குறே?”

“பின்னெ எப்பிடிக் கேக்குறது..?”

“ஒரே குடும்பமா இருக்குறோம். வர்ற வரும்பிடியெ இந்தக் குடும்பத்துக்கினு போடாம நா ஒருத்தன் எடுத்துக் தனியா வெச்சுக்கிறது எப்படி ஞாயமாகும்.”

“உங்க ஞாயமெல்லாம் இத்தனை நாளும் நடந்தது செரிங்க! இனிமே உங்க ஞாயத்தைச் செரிப்படுத்திக்கிறதுதானுங்க  ஞாயம்”.

“என்ன நீ சொல்றேன்னு புரியிலையே..!”

“வந்துங்க… மாமா! நாஞசொல்றது உங்களுக்குச் சுலுவா புரியக்கூடியது தான். உங்களுக்குக் கல்யாணம் ஆகுறதுக்கு முந்தி நீங்க பொதுவுல இந்தக் குடும்பதுக்கினு காடுமேடா அலஞ்சு பாடுபட்டது செரி, இப்ப எனக்குத் தாலி கட்டி ஒரு குடும்பஸ்தனாவும் ஆகியாச்சு. இனிமே… நம்மளுக்கினு ஒரு சம்பாத்தியம் இருக்கோணும்னு உங்களுக்கு அக்கறை வரவேணுமல்லுங்க ..”

கண்ணாத்தாள் சொன்ன விபரத்தைக் கேட்டதற்குப் பிறகு அவனுடைய மனம் அதைப்பற்றிச் சிந்திக்கத் துவங்கியது. அத்தோடு இதைப் பற்றி பெற்றோர்களிடத்தில் எப்படிப் பேச முடியும்? என்கிற லேசான அச்சமும் கலந்து கொண்டு சிரமப்படுத்தியது.

குரும்பபாளையத்து வயலுக்குப் போய் அங்கு ஆடுகளைக் “கிடை” போட்டிருந்தான். மனைவி சொன்ன கருத்து மனதில் எழுவதும் கிடையோடுவதுமாக அலைக் கழித்துக் கொண்டிருந்தது.

சுப்பையனிடம் அவனுடைய மனைவி பேசிக் கொண்டிருந்தபோது, மொபட் சாவியை எடுப்பதற்காக வீட்டுக்கு எதேச்சையாக வந்த நமச்சிவாயம் அதைக் கேட்க முடிந்தது. சந்தடியில்லாமல் அதைக் காதில் வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான். மறுநாள் நாகரத்தினாத்திடம் இதைக் கோடி காட்டினான். இது போன்ற வாய்ப்புகாகவே காத்திருந்தவள் போல். “அவளா ஒண்ணுந்தெரியாதவ! என்னம்மோ அப்பாவியாட்ட இருக்குறா, எதார்த்தமான பொண்ணு… அப்பிடின்னு சொன்னாங்களே..! இப்பத் தெரியுதுங்களா?” என காரம் கலந்த தொனியில் கேட்டாள்.

“தெரிஞ்சு இப்ப என்ன பண்ணச் சொல்றே…?

“பண்ணுறது ஒண்ணும் வேண்டாம்! பேசாம ஆடுகளை விற்கச் சொல்லி அந்தப் பணத்தை மூணு பங்காகப் பிரிக்கச் சொல்லுங்க. உங்குளுக்கினு அதுல ஒரு பங்கு வருமல்லொ! அதெய வெச்சு நம்மளுக்கினு சொந்தத் தொழிலா ஒண்ணெத் தொடங்குனாப் போவுது”.

“இதையப் பெரியவுக ஒத்துக்குவாங்களா…?”

பெரியவுங்க யாருங்க? உங்க அய்யனும் அம்மாளுநதானெ எப்பவிருந்தாலும் சொத்தை மூணு பங்காகப் பண்ணித்தானெ குடுக்கப் போறாங்க.”

“நீ சொல்லுறது ஆட்டையும் காட்டையும் பங்கு போடுற விசியத்துல வேண்ணா செரிப்பட்டு வரும்! இதுல அது செரிப்படுமாங்கிறது தெரியல! ஏன்னு கேட்டீன்னா சிறுவயிசுல இருந்து அதைய மேய்ச்சுப் பராமரிச்சு இப்படிப் பட்டியாப் பண்ணுனது என்ர தம்பிகாரன் ஒருத்தனோட கடுமையான பாட்டுலதான்.”

`”ச்செரி இருக்குட்டும் காலமெல்லாம் இப்பிடியே தான் நாம ஒண்டிக் குடித்தனத்துல ஒரு இஞ்சியுங்கூட முன்னேற முடியாமச் சிக்கியிட்டு முழிச்சிட்டு இருக்கப் போறதான்னு சொல்லுங்க..?

`”அதுக்குப் பெத்தவிங்க பாத்தல்லொ வழி பண்ணோணும் காட்டெ விக்கிறதுக்கே அய்யங்காரரு ஒத்துக்காமெ நாளே ஒட்டிட்டு இருக்குறாரு! நானும் அதுக்கான சிறுசிறு முயற்சிகளே மூணு வருசமாத்தா செஞ்சு பாக்குறேன் ஒண்ணும் கைகூடி வருலெ”.

“இதுவெரைக்கும் போனதுக போகுட்டும்.இப்ப அவிகளே அதுதா உங்க தம்பி பொஞ்சாதியே இந்தப் பேச்சே ஆரம்பிச்சதும் கூட நல்லதுக்குதான்னு வெய்யுங்க.”

“அவ என்னொ…ஆடுகளை மூணுபங்காப் பிரிக்கச் சொல்லி புருசனுக்கு ஓசன சொல்றாப்படியா தோணுது! பட்டி முச்சூடுக்கும் அவிகதான் உரிமை கொண்டாட முடியும்னு ருசுப்பேத்தறாப்பலெயல்ல எனக்குப் படுது”.

“படுறது என்னுங்க! அந்த நெனைப்போட வெளியிலெ வந்து வாய் தொறக்கட்டும். அதுக்குப் பதில் சொல்ல நா இருக்குறேன். உங்க அய்யனாத்தா, தங்களோட மக்கமாருகளெ செரிசமமாப் பாத்து ஞாயம் சொல்லாப் போறாங்களா? இல்லெ! ஆடுக பொறகால சுத்திட்டுத் திரிஞ்ச அந்த ஒருத்தனுக்கே தான் அதுக பூராவும் சொந்தம்னு சொல்றாங்களான்னு பாத்துக்கலாம்”.

“…இப்ப காடுகரைனாலெ எந்த வரும்படியும் இல்லெ! ஆடுகளைப் பிரிச்சு வித்தால் அதுல தம்பிகாரன் காலேஜ்ஜில படிக்கிற செலவுக்கும் அவம்பாங்கு பிரயோஜனப்படும். என்னொ எங்க அய்யனுக்கு இதுல சல்லிக்காசுங் கூட கெடைக்காது. சோத்துக்கே மொடை வரும்.”

“அதுக்கு நீங்க ஒருத்தரு எதுக்கு மணத்தாங்கல் படவேணும். மத்த மக்க ரெண்டு பேரும் எங்கெ போய்ட்டாங்கனாமா? அவிகளுக்கானது உங்களுக்கு ஆயிட்டுப் போகுட்டும். நாஞ்சொல்றதெக் கவனமாக் கேட்டு அதும்படி நடந்தாலே போதும்.”

நாகரத்தினம் மனதில் உண்டான பரபரப்புக்குத் தகுந்தாற்போல் வழிமுறைகளைக் காட்டியதோடு,

“பாப்பம்பட்டிக்காரிக்கே இத்தனெ கருத்துக இருந்தா எனக்கு எத்தன தினுசா திட்டங்க இருக்குமுங்கறே…” என முனகியவாறு பீரோவில் சேலைகளை அடுக்கி வைத்தாள்.

…(தொடரும்)