சமூக பணியாற்ற பதவி தேவையில்லை!

– பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் விழாவில் துணை ஆணையர் லட்சுமி பேச்சு

தப்ப தட்டிக் கேட்க போலீஸா இருக்கனும்-னு இல்ல! சமூக அக்கறை இருக்கிற யாரு வேணாலும் தட்டிக் கேட்கலாம். என்ற போர்முலா மூலம் உருவானது தான்.

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்

இளங்கன்று பயமறியாது-னு ஜல்லிக்கட்டு மூலமாகவே நம்ம உறுதி செய்துவிட்டோம். இருந்தாலும் சில விஷயங்களைத் தட்டிக் கேட்க பலருக்கு தயக்கம்.

ரோட்டில் நடக்கும் அநியாயங்களை வேடிக்கை பார்ப்பது பலர், அதை தைரியமாகத் தட்டிக் கேட்பதோ சிலர் மட்டும் தான், காரணம், நம்மிடம் தக்க அதிகாரம் இல்லாதது தான்.

கோவை மாநகர காவல் துறை மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இணைந்து நடத்திய சமுதாய காவல் பணி பயிற்சி முகாம், அவினாசி ரோட்டில் உள்ள காவல் சமுதாய கூடத்தில் நடந்தது. இதில் பல்வேறு மாணவர்களும் கல்லூரி ஆசிரியர்களும் பங்கேற்றனர். வரவேற்புரையோடு தன் உரையைத் தொடங்கி பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: மக்களின் பிரச்சனைகளை சரி செய்வது காவல் துறைக்கு மட்டும் பங்கில்லை. மாணவர்களாகிய உங்களுக்கும் கூட தான்.

கலாம் கண்ட கனவு போல் எதிர்கால இந்தியா மாணவர்களுடைய கையில் தான் உள்ளது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பில் இணைவதன் மூலம் நம் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உடனுக்குடன் தட்டிக்கேட்டு அதற்க்கு தீர்வு காண முடியும். குற்றங்கள் குறையும் பொழுது நம்சமூகம் நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் அடையும் என்றார்.

போக்குவரத்து மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.சரவணன் கூறியதாவது:  பொதுவாக வார இறுதி நாட்களில் ஊர் சுற்றுவது, சினிமா பார்ப்பது போன்ற பொழுது போக்கிற்காக மட்டும் தான் இளைஞர்கள் நேரத்தை செலவிடுவார்கள். ஆனால் இன்றோ, சமுதாய கடமைக்காக தன பொழுதுபோக்கை தூக்கி எரிந்து விட்டு மாணவர்கள் வந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழு கோடியை தாண்டிவிட்டது. காவல் துறையின் எண்ணிக்கையோ 1,20,000 மட்டுமே. ஏழு கோடி மக்களை சமாளிக்க, போலீஸ்காரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எங்களுக்கு உதவ உருவாக்கப்பட்ட அமைப்பு தான் இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ். சமூக பொறுப்புள்ள அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். கோவை மாநகரக்காவல், சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் எஸ்.லட்சுமி கூறியதாவது: முன்பிருந்ததை விட, இப்பொழுது குற்றங்கள் அதிகமாகிவிட்டன. அதுவும் வித்தியாசமான குற்றங்கள். இதை தடுக்க காவல்துறை எண்ணிக்கை குறைவு.

எங்களுடைய சுமையை குறைக்க உருவாக்கியது தான் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ். மக்களுக்கும், காவல் துறைக்கும் வேலை செய்ய ஒரு நல்ல வாய்ப்பு. அதற்கு முன் மாணவர்களாகிய நீங்கள் பொறுப்புள்ளவராக இருக்க வேண்டும், நாங்கள் ஏன் மாணவர்களை தேர்ந்தெடுத்தோம் என்றால், சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களின் சக்தியை நாம் அறிவோம்.

அந்த மாணவ சக்தி, நல்ல விஷயங்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். தன் உரிமையை மீட்க, ஜனநாயக முறைப்படி போராட்டம் செய்வது தப்பில்லை. நாடு என்ன செய்தது என்று யோசிக்காமல், நாம் நாட்டுக்காக என்ன செய்தோம் என்று யோசிக்க வேண்டும். சமூக பணியாற்ற பதவி தேவையில்லை. பெரிய துறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை, சாதாரணத் துறையில் சாதனை ஊழியர்கள் இருந்தால் கூட போதுமானது.

உண்மையான சமுதாய பணியை செய்யவும், காவல்துறைகளை பற்றி தெரிந்து கொள்ளவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. மேலும் நாங்கள் கொடுக்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அடையாள அட்டை நல்ல செயல் செய்வதற்காக மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். எங்களுடன் பணியாற்ற, நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

அடுத்ததாக, கோவை மாநகர காவல் ஆயுதப்படை ஆய்வாளர், ரவிச்சந்தர் நன்றி கூறினார்.

– பிரியங்கா கனகராஜ், படம் : பாலாஜி