தோனிக்கு பத்மபூஷன் விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை!

நாட்டின் 3வது உயரிய விருதான பத்மபூஷன்விருதுக்கு மகேந்திர சிங் தோனியின் பெயரை பரிந்துரை செய்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

கிரிக்கெட் விளையாட்டிற்கு தோனி அளித்த அளப்பரிய பங்களிப்புக்காகவும், கேப்டனாக பல சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றுத்தந்தமையை கவுரவிக்கும் விதமாகவும் பத்மபூஷன் விருதுக்காக தோனியின் பெயரை பரிந்துரைத்துள்ளது கிரிக்கெட் வாரியம்.

இது தொடர்பாக பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, பத்மபூஷன் விருதுக்கான பரிந்துரை குறித்த விவாதத்தின் போது அனைத்து உறுப்பினர்களாலும் தோனியின் பெயர் ஏகமனதாக முன்மொழியப்பட்டது என்றார். நாட்டிற்காக இரண்டு உலகக் கோப்பையை வென்றுதந்த தோனியைத் தவிர இந்த விருதுக்கு ஏற்றவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்ம விருதுகளுக்காக வேறு எந்த வீரரின் பெயரையும் பிசிசிஐ பரிந்துரைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

36 வயதாகும் முன்னாள் கேப்டன் தோனி, 302 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9737 ரன்களும், 90 டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்களும், 78 டி20 போட்டிகளில் 1213 ரன்களும் குவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் 19 சதங்களும், (டெஸ்ட்:6; ஒருநாள் போட்டி:10), 100 அரை சதங்களும் அடித்துள்ளார் தோனி.

விக்கெட் கீப்பராக ஒருநாள் போட்டிகளில் 285, டெஸ்டில் 256, டி-20 போட்டிகளில் 43 என மொத்தமாக 584 கேட்சுகளை செய்துள்ள தோனி, 163 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார்.

முன்னதாக அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ள தோனிக்கு பத்மபூஷன் விருதும் அளிக்கப்பட்டால், பத்மபூஷன் விருதைப் பெரும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை அவர் பெறுவார்.

பத்மபூஷன் விருது பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள்:

  • சச்சின் டெண்டுல்கர்
  • கபில் தேவ்
  • சுனில் கவாஸ்கர்
  • ராகுல் டிராவிட்
  • சந்து போர்டே
  • தியோதர்
  • சி.கே. நாயுடு
  • லாலா அமர்நாத்
  • ராஜா பலிந்திர சிங்
  • விஜய ஆனந்த்