“எங்க அல்லு எங்களுக்குத்தான் தெரியும்”

கரோனா வைரஸ் பாதிக்காத வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளுடன், ரஷ்யாவில் ‘கோப்ரா’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

முதலில் சீனாவில்தான் கரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது. அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்றவர்களின் மூலம் பரவியது. தற்போது இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டு வருகின்றன. பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியீட்டைத் தள்ளிவைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால், ‘கோப்ரா’ படக்குழுவினரோ ரஷ்யாவில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். அஜய் ஞானமுத்து இயக்கி வரும் இந்தப் படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ரஷ்யாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும், நடிகர்களிடம் தேதிகள் வாங்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்புக்குச் சென்றுவிடலாம் என்று தீர்மானித்துள்ளனர். ஆனாலும், பல்வேறு முன்னேற்பாடுகளுடன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் பல்வேறு இணையதளங்களில் செய்தியாக வெளியானது. அந்தச் செய்தியைக் குறிப்பிட்டு ‘கோப்ரா’ இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பதிவில், “எங்க அல்லு எங்களுக்குத்தான் தெரியும்” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.