ஊர் சொல்லும் கதை கோவில்பாளையம்

கொங்கு  நாட்டில் பல  கோவில்களும் உண்டு. கோவில் பாளையம் என்ற பெயரில் சில ஊர்களும் உண்டு. இங்கு நாம் பார்க்கப் போவது கோவை சத்தியமங்கலம் சாலையில் உள்ள கோவில்பாளையம் என்ற ஊராகும்.

இந்த ஊரின் பழைய பெயர் கவயன் புத்தூர் என்றுபதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கூறுகின்றன. கவயன் என்ற ஒரு தலைவன் இங்கு வசித்ததாகவும், அவன் பெயரால் அமைந்த காரணத்தால் இந்த ஊருக்கு கவயன் புத்தூர் என்ற பெயர் வந்ததாகவும் செவிவழிச் செய்திகளும், சில நூலாதாரங்களும் கூறுகின்றன. அவன் வழிபட்ட காரணத்தால் இங்குள்ள காளி எனும் பெண் தெய்வம், கவயகாளியம்மன் என்று அழைக்கப்பட்டதாகவும் மேலும் செய்திகள் கூறுகின்றன. அதற்கேற்ப இன்னும் இந்த ஊரில் கவயகாளி அம்மன் கோவில் உள்ளது.

கவயன்புத்தூர் எப்படி கோவில்பாளையமாக மாறியது?

இங்குள்ள கால காலேசுவரர் கோவில்தான் இதற்குக் காரணம் ஆகும். இந்த ஊர் கொங்குச் சோழர்கள் காலத்தில் நல்ல சிறப்பு பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியில் உள்ள பெரிய கோவில்களில் ஒன்றாக இந்த காலகாலேசுவரர் கோவில் திகழ்கிறது. இங்குள்ள சிற்பங்களும் கல்வெட்டுகளும் இதனை உறுதி செய்கின்றன.எல்லோருக்கும் காலத்தை நிர்ணயம் செய்பவராக எமதர்மனை கூறுவதுண்டு. அந்த எமதர்மன் ஆகிய காலனே வந்து வழிபட்ட ஈசுவரர் என்ற பொருளில் இந்த கோவிலானது காலகாலேசுவரர் கோவிலாக அழைக்கப்படுகிறது. அக்காலகட்டத்தில் இப்பகுதியில் இருந்த ஊர்களுக்கெல்லாம் ஒரு தலைமையிடமாக, பெரிய கோவில் அமைந்திருந்த ஊராக இந்த ஊர் இருந்தது.

அதனால் இதன் பழைய பெயரான கவயன்புத்தூர் என்பது மெல்ல மறைந்து, அதற்குப் பதிலாக கோவில்பாளையம் என்ற பெயர் பிரபலமாக வழங்கப்படலாயிற்று.

அன்று மைசூர் பகுதியில் இருந்து வணிக வழியில் அமைந்த முக்கிய ஊராக கோவில்பாளையம் திகழ்ந்தது. இன்றும் இப்பகுதியின் முக்கிய ஊர்களில் ஒன்றாக, இப்பகுதி கிராமங்களுக்கு ஒரு மைய இடமாக கோவை சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் திகழ்வது குறிப்பிடத்தக்கது.