ஆனந்தம் மலரட்டும்…

மகிழ்ச்சி என்பது வெளியே இருந்து வருவது! ஆனந்தம் என்பது உள்ளே இருந்து மலர்வது. மகிழ்ச்சி தற்காலிகமானது. ஆனந்தம் நிரந்தரமானது. பெறுவதால் உண்டாவது மகிழ்ச்சி. தருவதால் ஊற்றெடுப்பது ஆனந்தம்.

பொதுவாக பெரும்பாலானவர் களுடைய மனம் என்ன கிடைக்கும் என்று தானே ஏங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இருந்து மாறி பிறருக்கு எவ்வாறு உதவலாம் என்று எண்ணத் தொடங்கும்போது மனம் ஆனந்தத்தின் வைகறையில் உற்சாகமாக உலவத் தொடங்குகின்றது.

1984 முதல் 1986 வரை கோவை பூசாகோ கலைஅறிவியல் கல்லூரியில் நான் முதுகலை சமூகப்பணிபயின்றேன். சமூகப் பணிபயில்பவர்கள் தொழில் நிறுவனங்களின் தொழிலாளர் நலஅதிகாரிகளாக பணிபெறுவார்கள். தொழிற்சாலைகள் சட்டம் 1948ன் படி தொழில் நிறுவனங்கள் 500 பேருக்கு மேல் பணியில் அமர்த்தி இருந்தால், அங்கு ஒரு தொழிலாளர் அதிகாரியை நியமிக்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்குமிடையே ஒரு பாலமாக அமைந்து தொழிலாளர்களுக்குச் சட்ட ரீதியான எல்லாச் சலுகைகளும் கிடைக்கச் செய்வதுடன், தொழிலாளர்களின் நலம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்றவற்றையும் பேணிக்காப்பது தொழிலாளர் நல அதிகாரியின் முக்கியக் கடமையாகும்.

எனது முதுநிலைக் கல்வியை முடித்ததும், கோவை இலட்சுமி மில்ஸ் சிங்காநல்லூர் கிளையில் தொழிலாளர் நல அதிகாரியாகப் பணியேற்றேன்.

தொழிலாளர்களுக்கும், தொழில் நிறுவனங்களும் எதிரெதிரான எதிர்பார்ப்புகளை உடையவர்கள். தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு பெரும்பாலும் சம்பள உயர்வு, சலுகைகள், குறைவான வேலைப்பளு, பணிக்காலத்திற்குப்பிறகும் சலுகைகள் எதிர்ப்பார்ப்பின் பட்டியல் நீளும். நிர்வாகத்தினரின் எதிர்பார்ப்பு என்னவென்றால், இலாபம், குறைந்த சம்பளம், உயர்ந்த தரம், கூடுதலான உற்பத்திதிறன், பன்முகத் தொழிற்திறன் என்று பட்டியலிடலாம்.

இப்பணியை ஏற்பவர்கள், அன்பு மனம் படைத்தவர்களாகவும், மற்றவர்களின் மனநிலையையும் எதிர்பார்ப்புகளையும் எளிதில் புரிந்து கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். சேவை என்பது சொல்லளவிலும் மனதளவிலும் இல்லாமல் அது செயலாக மலர வேண்டும்.

கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் அதே நேரத்தில், மற்றவர் களுக்கும் தனக்கும் தீங்கு விளைவித்துக் கொள்பவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும் அறிவுரை களையும் வழங்க வேண்டும்.

தொழிலாளர்களின் முன்னேற்றத் திற்குத் தேவையான பயிற்சியும், கல்வியறிவும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

பணிபுரியும் ஒவ்வொருவர் மனதிலும் நற்சிந்தனைகளை உருவாக்க வேண்டும். அதன் மூலம் அமைதியான தொழிலுறவு, ஆரோக்கியமான குடும்ப வாழ்வு, மகிழ்ச்சியானசமுதாயம், என வாழ்க்கையின் அனைத்துப் பரிணாமங்களிலும் ஆனந்தமாக வாழ வழிவகை செய்துவிட முடியும். சிலருக்குத் தவறான பழக்கங்கள் இருக்கலாம்.

அதன் மூலமாகத்தான் தனது சம்பளத்தை வீணடித்துவிட்டு, குடும்பத்தை கண்ணீரில் மிதக்கச் செய்துவிடும் நிலை உருவாவதைத் தடுக்கும் விதத்தில் தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

மொத்தத்தில், தொழிலாளர் நல அதிகாரியின் செயல்பாடுகள் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும், தொழிலாளர்களின் வளர்ச்சிக்கும் அஸ்திவாரமாக அமைய வேண்டும். எதையும் விருப்பு வெறுப்பற்ற மனநிலையுடன் அணுகி, பிரச்சனைகளுக்குச் சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

இப்பணியில் உள்ளவர்கள், மனோதத்துவம், முடிவெடுத்தல், ஆலோசனை வழங்குதல், பொது அறிவு, தொழிலாளர் நலச் சட்டங்கள் என பன்முக அறிவையும் அனுபவத்தையும் தொடர்ந்து வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

பூசாகோ கலைஅறிவியல் கல்லூரியில், சமூகப்பணிபயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னால், “சமூகப்பணிமன்றம்“ (Social Work Forum) உருவாக்கப்பட்டது. இம்மன்றத்தின் நோக்கம், முன்னாள் மாணவர்களின் அனுபவ அறிவு இன்னாள் மாணவர்களுக்குக் கிடைக்க செய்வதோடு, முன்னாள் மாணவர்களின் சந்திப்பிற்கும், அவர்களிடையேயான நட்பு வாடி விடாமல் தொடர்ந்து வசந்தமாகவே நிலைப்பதற்கு ஆவன செய்வதாகவும், அனைவரும் இணைந்து சமூகப்பணிகளை மேற்கொள்வதாகவும் இருக்கிறது.

இச்சமூகப்பணிமன்றத்தின், வருடாந்திரக் கூட்டம், சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழகஅரசின் “தமிழ்ச் செம்மல்” விருது பெற்றுள்ள என்னை பாராட்ட வேண்டும் என்று அதன் தலைவர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் என்னிடம் விருப்பம் தெரிவித்தார்கள்.

அதற்கு நானும் மகிழ்வுடன் சம்மதித்தேன். பாராட்டுக்கள் பலதிசைகளில் இருந்து வந்து குவிந்தாலும், படித்த கல்லூரியில் இருந்து கிடைப்பது மிகவும் பெருமைக்குரியது.

அதுவும், பேராசிரியர்களும், முன்னாள் மற்றும் இன்னாள் மாணவர்களும் சேர்ந்து வழங்கும் பாராட்டுக்கள் விலை மதிப்பற்றது.

பாராட்டுக்கு மட்டும் இரட்டை நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது. அதாவது பாராட்டுபவருக்கும் மகிழ்ச்சி; அதைப் பெறுபவருக்கும் மகிழ்ச்சி. மனம் திறந்து பாராட்டும் போது மனம் ஆனந்தக் குளத்தில் மூழ்கித் திளைக்கின்றது. அதே நேரத்தில், பாராட்டுப் பெறுபவரின் மனம் மகிழ்ச்சி வானத்தில் சிறகு விரித்து ஆயுளை அதிகப்படுத்திக் கொள்கிறது.

பாராட்டிப்பாருங்கள்! இதன் உண்மை புரியும். பாராட்டு என்பது உதடுகளின் ஓசையாக இல்லாமல், அது இதயத்தின் இசையாக இருக்க வேண்டும். எங்கள் ரூட்ஸ் நிறுவனத்தின் சேர்மன் திருமிகு. கே.ராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக்  கலந்து கொண்டு, தனது அனுபவ உரையை வழங்கி என்னுடன் எல்லோரையும் உற்சாகப் படுத்தினார்கள்.

என்னுடைய பேராசிரியர்கள், திருமதி முனைவர் ஜோதிமணி, முனைவர் ஏ.சண்முகசுந்தரம், முனைவர் ராஜன் மற்றும் இன்னாள் பேராசிரியர்கள் எனது வகுப்புத் தோழர்கள், திரு.சபாபதி, திரு.இஸ்ரவேல் கனகராஜ், திரு.ராஜேந்திரன் மற்றும் எனது சீனியர்கள், திரு.பி.ஆர்.பழனிச்சாமி, திரு.ஈஸ்வரன், திரு.முத்துவேலப்பன், இம்மன்றத்தின் செயலாளர் திரு. சரவணன் மற்றும் ரூட்ஸ் நிறுவனத்தின் முனைவர் எஸ்.சுதாகர் மற்றும் எம்.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு என்னை வாழ்த்து மழையில் நனைத்தெடுத்தார்கள்.

எனது மனைவி திருமதி கிருஷ்ணவேணியும், இளைய மகன் கவி.சித்தார்த்தும் கலந்து கொண்டது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அள்ளித் தந்தது.

ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணை ந்து பெரும் அறிவு வெள்ளத்தையும் அனுபவ முத்துக்களையும் வாழும் தலை முறைக்கும் வளரும் தலை முறையினருக்கும் வழங்கி மகிழ வேண்டும். ஆயுள் முழுவதும் ஆனந்தப் பூஞ்சோலையில் உலாப் போகவேண்டும். ஆம்! பெறுவதில் இல்லை ஆனந்தம்; தருவதில்தான் இருக்கின்றது.

மீண்டும் அடுத்தவாரம் சிந்திப்போம்.