கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் கணிப்பொறி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியில் ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் கணிப்பொறி நிறுவனத்தின்  திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியினை இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமையேற்று தொடங்கிவைத்தார். இவ்ஓப்பந்தம் கல்லூரியின் முதல்வர் ஜேனட் மற்றும்  ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் கணிப்பொறி நிறுவனத்தின் விநியோகத்துறையின் செயல் துணைத் தலைவர் ஜே.என்.வீ.சுனில் இடையே கையொப்பம் இட்டு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர் சுனில் பேசுகையில், காலத்திற்கு ஏற்றாற்போல தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் மாறவேண்டும். மாற்றம்தான் அடுத்த பரிமாணத்திற்கு கொண்டுசெல்லும். மாற்றத்தினை கொண்டுவராத நிறுவனங்கள் சந்தையில் நிலைப்பதில்லை. எனவே உலகில் நடக்கும் தற்போதைய சூழ்நிலையினை  தெரிந்து நிறுவனங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவேண்டும். ஆய்வு நோக்கத்துடன் படியுங்கள். வேலை வாய்ப்பினைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். எதிர்காலத்தில் தொழில் வல்லுனர்களாக வரமுயலுங்கள் எனக் கூறினார்.

இந்த ஒப்பந்தம் மூலம் இக்கல்லூரியின் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வேலைக்கு எடுக்க உள்ளனர். இந்த நிறுவனம் இவ்வருடத்தில் கல்லூரியின் 25  மாணவர்களை தேர்ந்தெடுத்து ரூபாய் 4.5 லட்சம் வருட சம்பளத்தில் பணிக்கு அமர்த்த உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் கணிப்பொறி நிறுவனத்தின் மனிதவளத் துறையின் துணைத் தலைவர் தினேஷ்குமரன், இதே துறையின் மேலாளர் ஜெயலட்சுமி எத்திராஜ் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.