தமிழக அரசுக்கு நன்றி

வேளாண்மை  பொறியியல் துறையின் மூலம் வேளாண் விளை பொருட்களை உலர்த்திட விவசாயிகளுக்கு சூரிய கூடார உலர்த்திகள் மானியத்துடன் அமைக்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண்மை இயந்திரமாக்கும் திட்டம், தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம், நீடித்த மானவாரி  சாகுபடி இயக்கம், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், சூரிய கூடாரம் அமைத்தல்  போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது. மேலும், வேளாண் விளைபொருட்களை அறுவடைக்குப் பிறகு, சூரிய வெப்பத்தை பயன்படுத்தி, அவற்றைப் பாதுகாப்பான கூடாரங்களில் உலர வைத்து சந்தையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை செய்ய ஏதுவாக, பாலிகார்பனேட் தகடுகளாலான பசுமை குடில் வகை சூரிய கூடார உலர்த்திகள் விவசாயிகளுக்கு மானியத்துடன், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அமைத்துத் தரப்படுகின்றது.

சூரிய கூடார உலர்த்தியில் வேளாண்  விளை பொருட்களை உலர வைப்பதன் மூலம் விளை பொருட்களை உலர்த்துவதற்கான கால அளவு, கூலியாட்கள் செலவு, அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு ஆகியவை குறைகிறது. விளைபொருட்கள் சுகாதாரமான முறையில் இயற்கை தன்மை மாறாமல் உலர்வதால் அவற்றின் தரம் உயர்த்தப்படுகிறது. மேலும் பூஞ்சைக்காளான் படிவதும் தவிர்க்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு சூரிய கூடார உலர்த்திகள் அமைக்க ரூ.18.23 லட்சம் மானியமாக  வழங்கப்பட்டுள்ளது. 2019-20ஆண்டிலும் விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்களுக்கு மானியத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

பயனாளி பாலு பேசுகையில், நான் கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம், கம்மாளப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். என்னுடைய 27ஏக்கர் விவசாய நிலத்தில் தென்னை மரங்களை பயிரிட்டுள்ளேன் பொள்ளாச்சியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக தேங்காய்களை உலர்த்திட, 400 சதுர அடி பரப்பளவில் சூரிய கூடாரம் அமைக்க விண்ணப்பித்திருந்தேன் என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வேளாண்மைத்துறை அலுவலர்கள் என்னுடைய நிலத்தில் சூரிய கூடாரம்  உலர்த்திகள் அமைத்துக்கொடுத்தார்கள். அதற்கான செயற்முறை விளக்கமும் அளித்தார்கள்.

இக்கூடாரத்தின் மொத்த செலவு ரூ.3,25,540 ல்  50 சதவிகிதம் மானியமத் தொகையாக  ரூ.1,62,770 தமிழக அரசால் எனக்கு வழங்கப்பட்டது. கொப்பரை தேங்காய்களை வெளிபுறத்தில் காயவைக்கும் போது ஒவ்வொரு முறையும் 5 முதல் 6 நாட்கள் வரை உலர்த்துவதற்கு தேவைப்படும். தற்போது 2 முதல் 3 நாட்களில் உலர்ந்து விடுகிறது. இதனால் எனக்கு கால விரயம் குறைகிறது.  மேலும், வெளிபுறத்தில் உலர்த்துவதால் 5சதவீகித அளவு கொப்பரை தேங்காய்கள் வீணாகிவிடும். தற்போது இக்கூடாரத்தின் மூலமாக கொப்பரை தேங்காய்கள் பூஞ்சைகளின்றி தரமானதாகவும், சுத்தமாகவும் உள்ளதால் தேங்காய்கள் வீணாவது தடுக்கப்படுகிறது. இதனால் அதிக விலைக்கு விற்று லாபம் அடைகிறேன். இதுபோன்று விவசாயிகள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அமைத்துக்கொடுத்த தமிழக முதல்வருக்கு வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கும் எனது  நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.