மகிழ்ச்சியை அடமானம் வைப்பதா?

நீங்கள் ஒரு கார் வாங்குவீர்கள். சந்தோஷமாயிருப்பீர்கள். ஆனால், பக்கத்து வீட்டுக்காரன் உங்களைவிட விலையுயர்ந்த கார் வாங்கினால், உங்கள் சந்தோஷம் உடனே புஸ்ஸென்று போய்விடும். ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் காரைப் பற்றியே அறிந்திருக்கவில்லை. ஆனால் அவனிடம் இருந்த பசுமாட்டைவிட அடுத்த குடிலில் இருந்த பசுமாடு அதிக பால் கறந்துவிட்டால், அவன் மனம் வெதும்பியிருப்பான்.

தற்போது மாட்டுக்குப் பதிலாக கார். அவ்வளவே. அடிப்படையில் மனிதனின் துன்பம் மாறிவிட்டதா என்றால்  இல்லை! கடந்த சில நூற்றாண்டுகளில் தன் சுகங்களுக்காக மனிதன், இந்தப் பூமியின் முகத்தையே மாற்றிவிட்டான். மற்ற உயிர்களைப் பற்றிய பொறுப்புணர்வு இல்லாமல் புழு, பூச்சி, பறவை, மிருகம் எல்லாவற்றின் இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டான். மரம், செடி, கொடிகளைக்கூட அவன் விட்டுவைக்கவில்லை. நிலம், நீர், காற்று எல்லாவற்றையும் சகட்டுமேனிக்குப் பயன்படுத்தி சுத்தமான காற¢று கிடைப்பதற்குக்கூட போராடும் நிலையை உருவாக்கிவிட்டான். எல்லாம் எதற்காக? தனக்கு சந்தோஷம் கிடைக்கும் என்று நினைத்துத்தானே?

ஆனந்தம் கிடைத்து அதைக் கொண்டாடும் மனநிறைவோடு அவன் பூமிப்பந்தையே சொக்கப்பனையாக எரிக்கட்டும். தப்பில்லை. ஆனால், சந்தோஷத்தைச் சிறிதளவும் ருசிக்கத் தெரியாமல், பூமியை மட்டும் அழித்துக் கொண்டிருக்க அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?

அத்தையின் நெக்லஸ்!

எனக்கு ஒரு அத்தை இருந்தார். நவீனமானவர். லேடீஸ் கிளப்பில் முக்கிய உறுப்பினர். அபாரமாக உடுத்திக் கொண்டு போவார். விமலா என்ற உறுப்பினருக்கும், அவருக்கும் எப்போதும் பிரச்னை. ஒரு குறிப்பிட்ட நாள் மீட்டிங்கிலிந்து திரும்பியதும் அத்தை ‘ஓ’வென்று அழ ஆரம்பித்தார்.

தலைவருக்கான தேர்தலில் தோற்றுவிட்டாரா? கார் விபத்துக்குள்ளா கிவிட்டதா? வேறு என்ன துக்கம்? புரியவேயில்லை. “விமலா என்னை நன்றாகப் பழிவாங்கிவிட்டாள்” என்று ஒருவழியாக அவர் அழுதபடி காரணத்தை விவரித்தார். அத்தை புதிய நெக்லஸ் ஒன்றை அணிந்து கொண்டு மீட்டிங்குக்குப் போயிருக்கிறார். மற்றவர் விசாரிக்கும்போது அந்த வைரங்களின் மேன்மையைப் பற்றி என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று தயார் செய்து வைத்திருந்தார்.

ஆனால், ஒரு உறுப்பினர்கூட நெக்லஸைக் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. அத்தையால் அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியவில்லை. விமலாவின் தூண்டுதலால் எல்லோரும் அப்படி அலட்சியம் செய்தார்கள் என்று அத்தை அவளை அழுது தூற்றினார். அத்தை விலையுயர்ந்த நெக்லஸ் வாங்கியது அவருடைய சந்தோஷத்துக்காகத்தான். ஆனால், எங்கேயோ உட்கார்ந்து கொண்டு, மௌனத்தினாலேயே அந்த சந்தோஷத்தை யாரோ ஒரு விமலாவால் பறிக்க முடிந்துவிட்டது. எப்பேர்ப்பட்ட அபத்தம் இது? உங்கள் வாழ்க்கையில்கூட இப்படி ஏதாவது நிகழலாம்.

உங்கள் ஆசையின் நோக்கம் என்ன? ஆனந்தமாயிருப்பது! ஆனால், எங்கே தவறு செய்கிறீர்கள்? இவ்வளவு படித்தால்தான் சந்தோஷம். இவ்வளவு பணம் இருந்தால்தான் மகிழ்ச்சி. மற்றவர் பொறாமைப்படும்படி நகை அணிந்தால்தான் ஆனந்தம் என்று அதற்கு ஏதேதோ நிபந்தனைகள் விதித்தீர்கள். வெளி சூழ்நிலைகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் உங்கள் விருப்பப்படி அமையாது. ஆசையின் நோக்கம் புரியாமல், வெளி சூழ்நிலைகளை நூறு விதமாக மாற்றிப் பார்த்தாலும் நிம்மதி கிடைக்காது. அப்படியானால், நெக்லஸுக்கு ஆசைப்பட்டது தப்பா? காருக்கு விருப்பப்பட்டது தவறா? கிடையவே கிடையாது. எதன் மீது வேண்டுமானாலும் ஆசை வைக்கலாம். சந்தோஷமாயிருக்க வேண்டும் என்பதே உங்கள் ஆசையின் அடிப்படை என்பதை மறந்துவிட்டு, அதற்கான கருவிகளாக நீங்கள் தேர்ந் தெடுத்த நெக்லஸிலும், காரிலும் சிக்கிப் போனதால்தான் இந்த அவலம். உங்கள் சந்தோஷத்தை மற்றவர்கள் சொற்களுக்கும், வெளி சூழ்நிலைகளுக்கும் அடமானம் வைக்காமல், வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள். அப்போது இந்த உலகையே உங்கள் விருப்பப்படி மாற்றக் கொள்ளலாம்!