கௌதம்மேனனுக்கு நன்றி…

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் எதிர்பாராத விஷயங்கள் நடப்பது சகஜம் தான். ஆனால் அது நமக்கு பிடித்ததுபோல நடக்கும்போது, நம் மனது மிகவும் ஆனந்தமடையும். சினிமாவிலும் அதைப்போல் தான். நடிக்கணும்னு பலர் ஆசைப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். ஆனால் வாய்ப்புகள் சரியாக அமையாத காரணத்தினாலேயே பலரது திறமை தெரியாமல் போய்விடுகின்றது. சிலருக்கு நல்லபடியாக வாய்ப்புகள் அமைந்து அதில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ப்ரியாதர்ஷின்.

கடின உழைப்பும், நமது இலட்சியத்தில் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் கொண்ட அவர், கவண்  படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஓர் அழகான காலைப் பொழுதில் அவரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் வாசகர்களுக்காக…

‘‘நடிப்பு, எனக்கு சின்ன வயதில் இருந்தே பிடிக்கும். திரைப்படங்கள் பார்க்கும்போது எனக்கு நடிப்பு மீது ஆசை வர ஆரம்பித்து விட்டது. நடிப்பின் மூலம் தனி இடம் பிடிக்கணும்னு பரத நாட்டியம் கற்றுக்கொண்டேன். ஒருசமயம், பள்ளியில் ஜூலியர் சீசர் நாடகம் போட்டாங்க. அதுல நான் நடிக்கணும்னு முடிவு பண்ணி ‘ஆடிசன்’ போனேன். எனக்குள் இருக்கும் நடிப்பைப் பார்த்துவிட்டு எனக்குக் கிடைத்த ‘மார்க்’ கதாபாத்திரத்தில் நடித்தேன். அப்போதிருந்தே எனக்கு பெரிய நம்பிக்கை வர ஆரம்பித்தது.

இவ்வாறான தருணத்தில்தான் கே. பாலசந்தர் இயக்கிய ‘மின்பிம்பங்கள்’ சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது எனக்கு இதை சரியா செய்வோமா, இல்லையான்னு ஒரு பயம் இருந்துச்சு. என் மனதைத¢ தயார்ப்படுத்திக் கொண்டு நடித்து முடித்தேன். அப்புறம் தொடர்ந்து ‘ரமணி vs ரமணி’ நாடகத்துல கூட நடிக்க வாய்ப்பு வந்தது. அதையும் நல்லபடியா முடித்துவிட்டு இருக்கும்போது, ‘மர்மதேசம்’ நாடகம் எல்லாத்துக்கும் தெரியும், அந்த நாடகத்துல முக்கிய கதாபாத்திரம் நடிக்க என்ன கூப்பிட்டார்கள். அப்போது என்னால் அதில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் நான் ஆஸ்திரேலியா சென்றுவிட்டேன். அதற்குபிறகு, 14 வருடம் நடிக்கும் எண்ணம், அதற்குன்டான சூழல் எதுவும் எனக்கு அமையவில்லை.

இருந்தாலும், என் மனதில் நடிக்கும் எண்ணம் ஆழமாக இருந்தது. அப¢போது விளம்பரப் படங்களில் நடிக்கும் வாயுப்பு என்னைத் தேடி வந்தது. சில விளம்பரப்படங்களில் நடித்துக் கொண்டு இருக்கும்போது, 24am ஸ்டூடியோவில் இருந்து அம்மா வேஷம் இருக்கு நடிக்க இண்ட்ரஸ்ட் இருக்கான்னு கேட்டாங்க. நான் உடனே ஓகே சொல்லிட்டேன். அந்த படம்தான் ரெமோ.

அப்படியே ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. அதற்கு கௌதம்மேனனுக்கு நன்றிகள் பல சொல்லணும். அந்த படம் நடித்து முடித்த பிறகுதான் கவண் படத்தில் நடிக்கும் வாயுப்பு எனக்குக் கிடைத்தது.

‘கவண்’ படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம். இயக்குநர் கே.வி.ஆனந்த் சார், என் கதாபாத்திரத்தின் மீது நிறைய நம்பிக்கையைக் கொட்டி நடிக்க வைத்தார். அதன் பலனை படம் பார்க்கும்போது உணர்ந்திருப்பீங்க. எனக்கு பல கைதட்டல்கள் வாங்கிக் கொடுத்த படம் அது. அந்தப் படத்தின்போது ஆர்ட் டைரக்டர் கிரண், விஜய் சேதுபதி, கே.வி.ஆனந்த் சார் எல்லாரும் ரொம்ப ஃபிரண்டிலயா இருந்தாங்க. நான் ரொம்ப சந்தோசமாக இருந்த தருணம்.

தற்போது பல படங்கள் நடித்துக் கொண்டு இருக்கிறேன். வரும் காலங்களில் என் நடிப்பைப் பார்த்து எனக்கு ஆதரவு தர வேண்டும். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்க. பிடிச்ச விஷயத்த ரசித்து செய்யுங்க. கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். முக்கியமாக, பெண்கள் சமுதாயம் வெற்றி பெற, அவர்களுக்கு நல்ல வழி அமைத்துக் கொடுங்கள். நன்றி. வணக்கம்.

  • பாண்டியராஜ்.