தாராபுரம்: ஊர் சொல்லும் கதை

1800 ம் ஆண்டு கோயம்புத்தூர் பகுதிகள் எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன. புதிதாக கோயம்புத்தூர் மாவட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால் இதன் பரப்பளவு மிகப்பெரிதாக இருந்ததால் நிர்வாக வசதிக்காக கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர் வடக்கு என்று இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது. அதன் மாவட்டத் தலைநகராக கோயம்புத்தூர் அமைக்கப்படவில்லை. பதிலாக கோயம்புத்தூர் தெற்கு மாவட்டத்துக்கு தாராபுரமும் கோயம்புத்தூர் வடக்கு மாவட்டத்துக்கு பவானியும் தலைநகரங்களாக இருந்தன. அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்றாக தாராபுரம் இருந்திருக்கிறது.

பழைய இலக்கியங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியன இந்த தாராபுரம் நகரத்தை ஸ்கந்தபுரம், விராடபுரம் என்றெல்லாம் அழைக்கின்றன. என்றாலும் தாராபுரம் என்ற பெயர் தான் நிலைத்து நிற்கிறது. விராடபுரம் என்பது மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத்தில் மறைவாக தங்கி இருந்த விராடதேசத்தைக் குறிக்கும். பொதுவாக மகாபாரதம் என்பது வட இந்தியாவில் நடைபெற்றதாக கூறப்படுவதாகும். இந்த நிலையில் தாராபுரம் விராடதேசமாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே கூறவேண்டும்.

அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தாராபுரம் நகரமானது பிரிட்டிஷ் ஆட்சியின் போது உருவானதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான இந்த நகரத்தின் பெயர் தாராபுரம் என்று எப்படி வந்தது.

பழைய கல்வெட்டுகள் இந்த தாராபுரம் நகரத்தை ராஜராஜபுரம் என்று குறிப்பிடுகின்றன. இப்பகுதி சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தபோது, இது ராஜராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. சோழ மன்னன் இராஜராஜ சோழனின் நினைவாக, அல்லது அவரால் ஆதரவு பெற்றதால் இந்த ராஜராஜபுரம் என்ற பெயர் வந்திருக்கலாம்.

இந்த ராஜராஜபுரம் என்ற பெயர் காலப்போக்கில் மருவி தாராபுரம் என்றாகிவிட்டது. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுள்ளது. கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் எனும், கோவிலும் ஊரும் புகழ்பெற்றவை. இந்த தாராசுரத்தின் முந்தைய பெயராக கல்வெட்டுகள் குறிப்பிடுவது இராஜராஜச்சுரம் என்பதாகும். இந்த இராஜராஜச்சுரம் மருவி தாராசுரம் என்று மாறி வழங்குவது போல, ராஜராஜபுரமும் மருவி தாராபுரம் என்று வழங்கப்படுகிறது.