காதல் பயணத்தில் பாலாஜி மோகன்

காதல் எல்லோருக்கும் பிடிச்ச விஷயம். நமக்கும் காதல் வந்தால் நம்ம வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கும்னு நினைப்போம். காதல் வந்த பிறகு காதல் பாடல்கள் கேட்பது, காதல் படங்களை ஒன்றுக்கு இரண்டு முறை பார்ப்பது போன்ற செயல்களில் நாம் ஈடுபடுவோம். தமிழ் சினிமாவில் காதல் எப்போதும் முக்கியமான விஷயமாக இருக்கும். இயக்குநர் பாலாஜி மோகன் ‘காதலில் சொதப்புவது எப்படி-?’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இவர் காதலை வித்தியாசமான முறையில் கையாண்டவர் என்று சொல்லலாம். அதற்கு பிறகு ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’ போன்ற படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன்.

இவர் ‘மாரி’ இரண்டாம் பாகம் எடுக்கப் போவதாகவும் அதற்கான முதல் கட்ட பணியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் பாலாஜி மோகன் இப்பொழுது as I am suffering from காதல்’’ என்ற டீசர் ஒன்றை இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார். காதலிப்பவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்று நகைச்சுவையாக திரைக்கதை அமைத் திருக்கிறார் பாலாஜி மோகன். காதல் திருமணம் முடிந்து எப்படி சண்டை போட்டுக் கொள்வார்கள். காதலித்து கொண்டு கல்யாணம் பண்ணாமல் லிவிங்-டு-கெதர் எப்படி வாழ்கிறார்கள். காதலித்து திருமணம் செய்துகொள்ள தயாராகும் தம்பதியினர் மற்றும் திருமணமாகி விவாகரத்து பெற்ற தம்பதியினர் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை மிக சுவாரசியமாக காண்பித்து உள்ளார்.

காதலிக்கும்போது எப்படியான பிரச்னைகள் வருகின்றன. அதை எப்படி யெல்லாம் ஆண்கள் சமாளிக்கிறார்கள், இரட்டைத் தனமான வசனங்கள், இப்போது இருக்கும் காலகட்டத்தில் இளம் சமுதாயம் எப்படி இருக்கின்றது என்பதை எந்த ஒளிவுமறைவு இல்லாமல் சொல்லிருக்கிறார் பாலாஜி மோகன்.

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பாலாஜி மோகன் நடித்திருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. கௌரவ வேடத்தில் ஆண்ட்ரியா வருகிறார். இது இளம் வயதினரை படம் பார்க்கத் தூண்டும் அளவுக்கு இருக்கின்றது.

ஒவ்வொரு காட்சியும் வித்தியாசமான முறையில் கையாளப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது டீசரில்.

கட்டுரை வடிவில், ‘‘as I am suffering from காதல்’’ படத்தைப் பற்றி சொல்வதைவிட பார்த்து மகிழுங்கள். பாலாஜி மோகனுக்கு இந்த காதல் பயணம் சினிமாவில் தனி சிம்மாசனம் போட்டு அமர வைக்கும் எனத் தெரிகிறது.