மாணவர்களை வடிவமைக்கும் ராமகிருஷ்ணா மேலாண்மை துறை

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை கல்லூரிகளுக்கான  போட்டிகளை CREZILS’19 (CREATIVE RISK TAKING  ENTREPRENEURS ZOOMED IN LEADERSHIP) நிகழ்வு மூலமாய் அண்மையில்  ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சி இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்காக பிரத்தியேகமாக நடத்தப்பட்டது. இதில் சமூக விழிப்புணர்வு குறித்த குறும்படம், அணி செயல்பாடு திறன் குறித்த வணிக போட்டிகள், விளம்பரம், சந்தைப்படுத்தும் யுக்தி மற்றும் தலைமைத்துவம் திறன் கண்டறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. மேலாண்மை துறை தலைவர் மேரி மெட்டில்டா தலைமை ஏற்று துவக்கவுரையாற்றினார். அவர் தம் உரையில் மாணவர்கள் தங்கள் திறமைகளை உணரவும் திறமைகளை வெளிப்படுத்தவும் வேலைவாய்ப்பு திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் இது போன்ற நிகழ்ச்சி அடித்தளமாக அமையும் என்று விளக்கினார். மேலும் வேலை வாய்ப்பு அளிக்கும் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களின் ஆளுமை திறன், படைப்பாற்றல், ஒருங்கிணைக்கும் திறன், இணக்கத்தன்மை, கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகிய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினராக சக்ஸஸ் ஹார்வெஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் தீபா நாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில் வெற்றி பெற விரும்பும் இளம் தலைமுறையினர் செயல்திறன் மேம்படுத்திக்கொள்வது பற்றிய அக்கறையின்மை, விவேகமற்ற செயல்பாடுகள், பழிதீர்க்கும் மனோபாவம், நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகள், தேவையற்ற பேச்சுக்கள் போன்ற வெற்றிகரமான வாழ்க்கைக்கு பயன்படாத நடவடிக்கைகளை பெரும் முயற்சி எடுத்து தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொலைநோக்கு பார்வை, நேர்மை, கிரகிக்கும் திறன், நம்பகத்தன்மை போன்ற சிறந்த பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும் எனவும் இதுவே ஒரு தலைசிறந்த தலைவனை உருவாக்க உதவும் என்றார்.

கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவ மாணவியர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியான ஸ்ரீ ராமகிருஷ்ணா இளம் தலைவர் விருது ஓம் ஸ்ரீ பாபுரி என்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரியில் பயிலும் வேதியியல் துறை மாணவருக்கு சான்றிதழ், கோப்பை மற்றும் ரொக்க பரிசு ரூ 3000 வழங்கப்பட்டது.