வெற்றியின் ஆயுதம்

சந்தித்தேன்… சிந்தித்தேன்…

நூல்கள் அறிவுலகத்தின் திறவுகோல்கள். வாழ்க்கையை வளப்படுத்தும் வசந்த காலங்கள். தேய்பிறையே இல்லாத பௌர்ணமியை நமது வாழ்க்கை வானத்தில் தோற்றுவிக்கும் அற்புத ஆற்றல் அரும்புகள். வாசிக்க வாசிக்க பசியைத் தூண்டும் அறிவுத் தூண்டல்கள். சாதாரண மனிதனையும் சாதனைச் சிகரத்தில் அமரவைக்கும் ஞானப¢ புதையல்கள். அறிஞர்களோடு பேசுகின்ற அனுபவத்தை அள்ளித் தருகின்ற காலப்பதிவுகள்! கலங்கரை விளக்குகள்.

“இல்லங்கள்தோறும் நூலகம் இருக்கவேண்டும். அத்துடன் இல்லத்தில் உள்ளோர் எல்லாம், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது சேர்ந்து வாசிக்க வேண்டும்“ என்றார் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். இல்லத்தில் நூலகம் இருந்தால் குடும்பமே ஒரு பல்கலைக்கழகமாக மாறும் என்பது உறுதி. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் புதுவீடு கட்டுகின்றபோது, கட்டட வரைபடத்தை பார்த்த எனது மனைவி கிருஷ்ணவேணி, “இந்த வரைபடத்தில் எங்கே நூலகத்தைக் காணோம்? முதலில் நூலகத்திற்கோர் அறையை ஒதுக்குங்கள்” என்று தெளிவாகவும் உறுதியாகவும் கூற¤னார¢. அவ்வாறே எனது வீட்டில் குடும்ப நூலகத்தை ஏற்படுத்தினோம்.

“கோயில¤ல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’’ என்பது முதுமொழி. ‘‘நூலகமில்லாத வீட்டில் குடியிருக்க வேண்டாம்” என்பது புதுமொழி. அறிவு துன்பத்தைப் போக்கும் அருமருந்தான நூல்கள், அறிவுக் களஞ்சியங்கள். வாசிப்பும் நேசிப்பும் இருந்தால் வாழ்க்கை, வளர்பிறை வானமாகவே இருக்கும். “அட்டையிட்ட அமுதமல்லவா?! புத்தகம்” என்றார் கவிப்பேரரசு வைரமுத்து.

‘புத்தகங்களுக்குச் செய்கிற செலவு, செலவல்ல அவை எதிர்காலத்திற்கான முதலீடு’. ஏனென்றால் புத்தகங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகின்ற நெம்புகோல். தெளிவையும் ஊக்கத்தையும் தருகின்ற உன்னத சக்திக் குவியல்கள்.

கல்வி நிலையங்களில், இல்லங்களில் நூலகம் இருப்பது சாதாரணம். ஆனால் ஒரு மருத்துவமனையில் நூலகம் அமைப்பது அசாதாரணம், அற்பதத்திலும் அற்புதம்.  நோயாளிகளின் மனதிற்கு வைத்தியம் பார்க்கும் மகத்துவம்; அவர்களின் ஆன்மாவையும் புனிதப்படுத்தும் அறிவு வேள்வி. ஆம்! அத்தகைய அரியதொரு காரியத்தை மேட்டுப்பாளையம் அருகே கோவைப்பாதையில் அமைந்துள்ள சபீதா மருத்துவமனையில் செய்திருக்கிறார்கள்.

சமீபத்தில், சபீதா மருத்துவமனையின் முதலாண்டு நிறைவையொட்டி ஒரு நூலகத்தை அங்கு திறந்துவைக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பொதுவாக மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான நூல்கள் மட்டும் இருக்கும். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருப்பின் அதைத் தெளிவுபடுத்த அந்நூல்களைப் பயன்படுத்துவதை நான் அறிவேன். ஆனால் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளும், அவர்களைப் பார்க்க வருகின்றவர்களும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்நூலகம்தான் உலகிலேயே முன¢மாதிரியான முதல்நூலகம் என்று கருதுகிறேன்.

“மருத்துவர்கள், உடலுக்கு வைத்தியம் பார்ப்பதோடு, நோயாளிகளின் மனதிற்கும் மருத்துவம் பார்க்க வேண்டும். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்” என்றார் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம். அவரது கருத¢தை மெய்ப்பித்துள்ளார் சபீதா மருத்துவமனையின் மருத்துவர் டி. சுசித்ரா. வாசிப்பிலும் இலக்கியத்திலும் ஆர்வம் மிக்க ஒரு இனியவர் அவர். இணையவெளியில் கருத்துமழை பொழியும் கற்பனைவளமும் சுதந்திரச் சிந்தனையும் மிக்க அவருக்கு நீங்களும் சொல்லுங்கள் ஒரு பாராட்டு!

வாழ்க்கை என்கிற பயணத்தை அழகானதாகவும் அர்த்தமுடையதாகவும் மாற்றிக் கொள்ள விரும்புகின்றவர்களுக்கு புத்தகங்களே புகழ¤டம். நம்மைப் புத்தாக்கம் செய்யும் திறன் புத்தங்களுக்கு உண்டு.

‘‘வாசிக்கும் பழக்கமுள்ளவர்கள், வசதியாக இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.வாசிக்க நேரமில்லை என்று சொல்பவர்கள் இன்னும் இருட்டில் தான் இருக்கின்றார்கள்’’  என்றார் ஒரு அறிஞர். ஆகவே வெளிச்சத்திற்கு வர விரும்புகின்றவர்களுக்கு ஞானஒளி வழங்கும் திறன்மிக்கவை நூல்கள்.

“பத்துப் பறவைகளோடு பழகினால் நீ ஒரு பறவையாக முடியாது! பத்து நதிகளோடு பழகினால் நீயொரு நதியாக முடியாது! ஆனால் பத்துப் புத்தகங்களோடு பழகினால் நீயொரு பதினொன்றாவது புத்தகமாகி எல்லோராலும் நீ படிக்கப்படுவாய்!” என்றார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

நமது வாழ்க்கையைச் செம்மைப¢ படுத்தும் விதமாக, ஆத்திச்சூடி, திருக்குறள், பாரதியார் கவிதைகள், காந்திஜியின் சத்திய சோதனை, அப்துல்கலாமின் அக்னிச்சிறகுகள் போன்ற புத்தகங்களை எல்லோரும் வாசிக்கலாம்; வாழ்க்கையையும் நேசிக்கலாம்.

தற்போதைய வேகமான வாழ்க்கைச் சூழலில் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவதாகக் குறைபட்டுக் கொள்வதோடு நின்றுவிடாமல், வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, பிறந்தநாள், திருமணநாள், திருவிழாக்கள் ஆகிய மகிழ்ச்சியான தருணங்களில் பரிசுப் பொருட்களுடன் புத்தகங்களையும் பரிசு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு நன்னெறிக் கதைகள், ஓவிய நூல்கள், நீதி நூல்கள் போன்றவற்றைப் பரிசாகக் கொடுத்து படிக்கும் பழக்கத்தை வளர்க்கலாம்.

மருத்துவமனையில் நூலகம் தொடங்கியுள்ள டாக்டர் சுசித்ரா அவர்களைப் பின்பற்றி, “தொழிலகம் தோறும் நூலகம்” தொடங்கலாம். பாட்டாளிகளை படிப்பாளி களாகவும், படைப் பாளிகளாகவும் மாற்றலாம். வாசிப்புக்கு வயது முக்கியமில்லை ஆர்வம் தான் முக்கியம். “இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறது என்று எனது கல்லறையில் எழுதுங்கள்” என்று கூறினாராம் பெட்ரன்ட் ரஸல் என்னும் மேதை.

ஒவ்வொரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும் போதும், வாங்குகின்ற அட்வான்ஸ் தொகையில் பாதிப் பணத்திற்கு புத்தகத்தை வாங்கி விடுவாராம் சார்லி சாப்ளின்.

“ஒரு புத்தகம் திறக்கப்படுகின்றபோது ஒரு சிறைசாலையின் கதவு மூடப்படுகின்றது” என்றார் நமது முதல் பாரத பிரதமர் ஜவகர்லால் நேரு. புத்தகத்தின் வலிமையை இதைவிடச் சிறப்பாகச் சொல்லமுடியாது.

காவல்நிலையங்களிலும், நூலகம் ஏற்படுத்தலாம். பிரச்னை என்று வருபவர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகின்றபோது, அங்குள்ள புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தால், அவர்களின் அறிவில் தெளிவு ஏற்படக் கூடும். அது அவர்களின் வாழ்க்கையைச் செம்மையாக்கும். அதன் மூலம், பிரச்னைகளை உணர்ச்சி ரீதியாக அணுகாமல், அறிவுரீதியாகவும், சாத்தியரீதியாகவும் அணுகக் கற்றுக் கொள்வார்கள்.

வாசிப்பை வகுப்பறைக்குள்ளாக மட்டுமே நிறுத்திக் கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் தொடர்வோம். வசதியாக வாழ்வதைவிட மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்தது என்பதை உணர்வோம்.

தொட்டுத் தொட்டுப் பார்த்தால்

அது வெறும் காகிதம்

தொடர்ந்து படித்தால்

அதுவே வெற்றியின் ஆயுதம்!

                  – கவிதாசன்

மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம்.

சிந்தனைக் கவிஞர். டாக்டர்.கவிதாசன்,

இயக்குனர் மற்றும் தலைவர், மனிதவள மேம்பாட்டுத்துறை,

ரூட்ஸ் நிறுவனங்கள்.