கல்வியில் சிறந்த தமிழ்நாடு?

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அரசாங்கத்துக்கு பல வகையான கடமைகளும், பொறுப்புகளும் உள்ளன. அவற்றில் உள்நாட்டுக் கடமைகளைப் பொறுத்தவரை கல்வியும் சுகாதாரமும் முதலிடம் பெறுகின்றன.

வறுமை மிதமிஞ்சி இந்த வையத்து நாடுகளில் எல்லாம் தாழ்வுற்று இருந்த இந்திய நாடு சுதந்திரத்துக்குப் பிறகு, இன்று ஓரளவு தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் இங்கு ஏற்பட்டுள்ள கல்வி, சுகாதார மாற்றங்களும், வளர்ச்சியும்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதில் தமிழ்நாடு பல வகையிலும் தனது முன்னேற்றங்களை பதிவு செய்திருக்கிறது.

சுதந்திரத்துக்கு முன்பே மாவட்ட கழகம் எனும் ஜில்லா போர்டுகள் ஆங்காங்கே பள்ளிகளை ஆரம்பித்தன. இன்றும் நூற்றாண்டைக் கடந்து அரசுப்பள்ளிகளாக செயல்படும் இவ்வகை பள்ளிகள் உள்ளன. அதில் படித்து பெரிய மனிதர்களாகி வீட்டிற்கும், நாட்டிற்கும் சேவை செய்த பெரியோர்கள் பலர் உண்டு. அதன் பிறகு காமராஜர் காலத்தில் கொண்டு வரப்பட்ட மதிய உணவுத்திட்டம், அரசு உதவி பெறும் எய்டட் பள்ளிகள், அதன் பிறகு கல்வி வழங்க அனுமதிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் என்று கல்வி வளர்ச்சியைப் பொறுத்தவரை தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகவே திகழ்ந்து வந்தது.

ஆனால் இன்று தமிழ் நாட்டில் கல்வியின் நிலை பல தடுமாற்றங்களுக்கு உள்ளாகி இருப்பதை கண்கூடாக காண முடிகிறது. அதிலும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் கிடைத்து வந்த கல்வி இன்று கடைச்சரக்காக மாறி பல்வேறு விலைப்பட்டியல்களுடன் வலம் வருகிறது.  பல்வேறு வகையாக இருந்து வருகிறது. அதிலும் பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்குள் நுழையும் கட்டத்தில் சாதாரண மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

சிலர் சிபிஎஸ்சி எனும் அகில இந்திய அளவிலான பாடத்திட்டத்தின் கீழ் படிக்கின்றனர். சிலர் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கின்றனர். பலர் அரசுப்பள்ளிகளில் படிக்கின்றனர். இதில் அரசுப்பள்ளி என்பது தற்போது சவலைக் குழந்தையாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்களை ஒப்பிடும் போது அரசுப்பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் பந்தயத்தில் பின்தங்கியே இருக்கின்றனர்.

அரசுப்பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் பின் தங்கியே இருக்கக் காரணம் என்ன?

இன்னொருபுறம் சில தனியார் பள்ளி மாணவர்கள், உயர்கல்வி நிலையங்கள் பலவற்றிலும் இடம் கிடைத்து படிப்பதற்கான காரணம் என்ன? அவர்கள் மட்டும் பல பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண் எடுப்பதும், மொத்த மதிப்பெண் அதிகம் எடுப்பதும் எப்படி?

பொதுவாகவே ஒரு தனியார் பள்ளியை விட அரசாங்கம் பல வகையிலும் சக்தி வாய்ந்தது. தனியார் பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் குறைவு; அதே நேரம் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் ஒப்பீட்டளவில் அதிகம். பல சலுகைகளும் உண்டு. இந்த நிலையில் மாணவர்களை சரியான முறையில் பயிற்றுவிக்க முடியாததற்கு என்ன காரணம்? ஆசிரியர்களின் திறமைக்குறைவா? அல்லது ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் திறனை வெளிக்கொண்டு வரமுடியாத அரசாங்கமா?

இவற்றை எல்லாம் விட இன்றுள்ள மார்க் எனும் அளவு கோலின்படி, அதிக மார்க் தகுதி பெற்று உள்ளே நுழையும் மாணவர்களின் உண்மையான தரம் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. மருத்துவம், பொறியியல் போன்றவற்றிற்கான அடிப்படை மனப்பாங்கு இல்லாத அந்த மாணவர்கள் அத்துறையில் நுழைவது நாட்டுக்கும் நஷ்டம். அவர்களுக்கும் கஷ்டம். அத்தோடு இந்திய அளவில் போட்டியிடும் திறனையும் நாம் மாணவர்கள்  பல வகையிலும் இழந்து வருவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதற்கு எப்படி தீர்வு காண்பது? யார் தீர்வு காண்பது?

ஜனநாயக நாட்டில் அரசாங்கம்தான் பூனைக்கு மணி கட்ட வேண்டும்.

கல்வி முறையைப் பொறுத்த வரை பாடத்திட்டம், ஆசிரியர்கள், தேர்வுமுறை இவைதான் கல்வித்தரத்தை நிர்ணயிக்கின்றன. இதில் ஏற்படும் சீர்கேடுகள் பல வகையிலும் கல்வித்துறையை மட்டுமல்லாது  மாணவர்கள், பெற்றோர்கள் மட்டுமல்லாது கூடவே நாட்டின் எதிர்காலத்தையும், வெகுவாக பாதிக்கிறது.

பொறியியல் கல்வி என்பது ஒரு மதிப்பு மிகுந்த கல்வியாக இருந்த நிலை மாறி, இன்று  ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் பணி வாய்ப்பின்றி சமூகத்துக்கும், பெற்றோர்களுக்கும் சுமையாக இருக்கும் நிலை உள்ளது.

சென்ற ஆண்டு மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்விக்கான இடங்கள் காலியாக கேட்பாரற்றுக் கிடந்தன.

இந்த பொறியியல் மாணவர்கள் கையில் கிடைக்கும் பட்டம் என்ற சான்றிதழைத் தவிர பல வகையிலும் திறமை குறைவானவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு ஐ. டி. ஐ. படித்த மாணவனுக்கு இருக்கும் தொழில் செய்திறன் கூட, பி. இ. படிப்புக்கு  இல்லாத வகையில்தான் இன்றைய கல்விமுறை அமைந்துள்ளது.

அதே நேரத்தில் மார்க் என்ற அளவு கோல் படி இந்த பொறியியல் கல்வி வாய்ப்பே, கிடைக்காமல் வேறு துறைகளுக்கு செல்லும் மாணவர்களும் உள்ளனர். காரணம் தற்போதுள்ள தேர்வு முறையும் மதிப்பெண் வழங்கும் முறையும் தான்.

அதைப் போலவே பள்ளிக்கல்வி என்பது பன்னிரண்டு ஆண்டு காலம் ஒரு மாணவனை அல்லது மாணவியை எதிர்கால வாழ்வுக்கு தயார் செய்வதுதான். அதில் தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளிகள் ஏன் பின்தங்கி இருக்கின்றன என்பதனை அரசு மனசாட்சியுடன் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஒரு தனியார் பள்ளி நிர்வாகத்தை விட அரசு நிர்வாகம் இத்துறையில் பின்தங்கி இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஆசிரியர்களை காலத்துக் கேற்ற வகையில் பாடத் திட்டங்களை தயாரித்து நடத்தச் செய்வதும், அதற்கேற்ற பயிற்சிகளை அளிப்பதும் மிக மிக முக்கியம். இல்லையென்றால் தமிழ்நாடு கல்வி ஒளியால் வெளிச்சம் பெற்ற நிலை மாறி மீண்டும் இருளில் மூழ்கும் நிலை ஏற்படும்.

கல்வித்துறையில் ஒரு பெரிய சீர்திருத்தம் தேவைப்படும் காலகட்டம் இது. நல்ல வேளையாக தமிழக அரசு இந்த ஆண்டு கல்வித்தறை சீர்திருத்தங்கள் குறித்து பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. இதை ஒரு தொடக்கமாக கொண்டு இன்னும் பல தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்த வேண்டும். மக்கள் எய்டட் பள்ளி அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு செல்லும் நிலைக்கு ஏன் தள்ளப்பட்டார்கள் என்று யோசிக்க வேண்டும்.

பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவசக் கல்வி, இலவச பாட புத்தககம், இலவச எழுது பொருள் பேனா, நோட்டுகள், இலவச சைக்கிள், இலவச லேப்டாப் என்று எத்தனை இலவசங்கள் அரசுப்பள்ளியில் தருகிறார்கள்?

அதே நேரம்  பல மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் புத்தகம், நோட்டு தொடங்கி, பென்சில், பேனா வரை விற்கிறார்கள். ஆங்காங்கே சீருடை தொடங்கி பல வகையிலும் பெற்றோரின் பணத்தை பெற முயற்சிகள் நடக்கின்றன.

இருந்தும் அத்தனை கஷ்டத்தையும் சகித்துக் கொண்டு மக்கள் ஏன் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு படையெடுக்கிறார்கள்? என்றால் தரம் அங்கிருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள், அதனால் படையெடுக்கிறார்கள்.

மக்களை விடுங்கள், எத்தனை அரசு ஊழியர்கள் அவர்களின் சக ஊழியர்களான அரசுப்பள்ளி ஆசிரியர்களை நம்பி தங்கள் குழந்தைகளை மனம் உவந்து அரசுப்பள்ளிகளில் சேர்க்கிறார்கள்? அந்த தரத்தை அரசுப்பள்ளிகள் தருவதாக உறுதியெடுத்துக் கொண்டாலே போதும். தமிழகத்தின் கல்வித்தரம் உயரும்.

அரசுப்பள்ளிகளோ, தனியார் பள்ளிகளோ தரமான கல்வியை கற்ற ஒரு தலைமுறையின் புண்ணியத்தில் தான் நாம் இன்று ஓரளவாவது நிம்மதியாக இருக்கிறோம். டாக்டர்களிடம் நம்பி மருத்துவம் பார்க்கிறோம்; பொறியாளர்கள் கட்டிய பாலங்கள் மீது ரயில் ஓடுகிறது. நாமும் பயணிக்கிறோம்.

ஆனால் இன்றுள்ள மனப்பாட சாமியார்கள், 200க்கு 200 வாங்கும் அதிபுத்திசாலிகள், நடைமுறை எதுவும் தெரியாத திறன் குறைவான பட்டதாரிகள் இவர்களை கொண்டதாக உருவாகி வரும் எதிர்கால சமுதாயத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது.

அதை மாற்றி ஒரு தரமான சமுதாயத்தை, தரமான கல்வியால் உருவாக்க அரசு முன்வர வேண்டும் அதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

– ஆசிரியர் குழு.