கேபிள் டிவி கட்டண உயர்வை வாபஸ் பெற ஆட்சியரிடம் மனு

அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் கேபிள் டிவி புதிய கட்டண  உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 300க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் திரண்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், மக்களே சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் புதிய முறையை அண்மையில்  அறிமுகப்படுத்தியது. அதன்படி அடிப்படை கட்டணம் 155 ரூபாய் எனவும் கட்டண சேனல்களை மக்களே தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது. இந்த புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் 500 ரூபாய் வரை வசூலிக்க வேண்டி வரும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் கேபிள் ஆபரேட்டர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்று கூறி கேபிள் ஆபரேட்டர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்டனர்.

300க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உடனடியாக புதிய கட்டண முறையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் எனவும் கேபிள் டிவிக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவையும் அவர்கள் அளித்தனர்.