விவசாயிகளின் போராட்டத்திற்கு ஜி.கே.வாசன் நேரில் ஆதரவு

விவசாயிகளின் உண்மை நிலையை புரிந்து விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதை கைவிட்டு புதைவழித்தடம் வழியாக மின்பாதை அமைக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட விவசாயிகள் 8 மையங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் சுல்த்தான் பேட்டையில் 10வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. காத்திருப்பு போராட்டம் நடைபெறும் மையத்தின் ஒரு பகுதியில் 4வது நாளாக உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், சுல்த்தான் பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர், தமிழகத்தில் தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு திட்டங்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும், விவசாயிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்காத அரசாக மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் மேகதாது விவகாரம் ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கையில் தற்போது விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க பணி நடைபெற்று வருகிறது எனவும் இது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார். காவல்துறை மற்றும் வருவாய் துறை மூலமாக இத்திட்டத்தைத் திணிக்க பார்க்கிறார்கள் என தெரிவித்த அவர், கேபிள் மூலமாக இத்திட்டத்தைக் மாற்றுவது அவசியம் எனவும் அவசர நடவடிக்கைகள் எடுக்க அரசு முன் வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

உண்ணாவிரதம் இருக்கின்ற விவசாயிகளின் நிலையை அரசு உணர வேண்டும் என தெரிவித்த அவர், மாற்றான் தாய் மனப்பான்மையை விவசாயிகள் மத்தியில் மத்திய ,மாநில அரசுகள் காட்டக்கூடாது எனவும் தெரிவித்தார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க மாநில அரசுக்கு முழு பங்கு உண்டு எனவும் சுமூக முறையில் இந்த பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.