பெற்றோர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப்பள்ளியில், பெற்றோர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

குழந்தைகளை வளர்ப்பதில், பெற்றோர்களுக்கும் பள்ளிக்கும் பெரும் பங்குண்டு. பெற்றோரும் பள்ளியும், ஒருவருக்கொருவர் துணை நின்று, குழந்தைக்குப் பாதுகாப்பான, கற்றல் சூழலை உருவாக்குவதுடன், குழந்தைகள் மனதில் நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும். குழந்தை வளர்ப்பில், பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள் என்பதால், பெற்றோர்கள் தங்கள் பொறுப்பினை அறிந்திருத்தல் அவசியம்.

அவ்வகையில், பள்ளியில் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவ மாணவியரின் பெற்றோர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், பள்ளிச் செயலர் சிந்தனைக்கவிஞர் முனைவர் கவிதாசன் தலைமை தாங்கினார். கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் உளவியல் துறை மருத்துவர் டாக்டர் சீனிவாசன், பள்ளியின் கல்வி ஆலோசகர் டாக்டர் கணேசன், கோவை ஆர்.கே.இயற்கை சிகிச்சை மையத்தின் மருத்துவர் விஜயகுமார், பள்ளி மருத்துவர் டாக்டர் முருகேசன், பள்ளியின் மாணவர் உளவியல் ஆலோசகர் சங்கீதா ஆகியோர் உரையாற்றினர்.

கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையின் உளவியல் துறை மருத்துவர், டாக்டர் சீனிவாசன், பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் ஏற்படுகின்ற சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றியும், அவர்களுக்கு உரிய முறையில் வழிகாட்டுகின்ற வழிமுறைகளைப் பற்றியும் விளக்கியுரைத்தார்.
கோவை ஆர்.கே. இயற்கை சிகிச்சை மையத்தைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர். எஸ்.விஜயகாந்த், வளமான வாழ்க்கைக்குத் தேவையான உணவு முறைகளைப் பற்றியும், இளம் பருவத்தினரான மாணவ மாணவியருக்குப் பள்ளியில் வழங்கப்படுகின்ற சரிசமவிகித உணவு முறைகளைப் பற்றியும் விளக்கினார். பள்ளியில் மாணவ மாணவியருக்கு மருத்துவம் சார்ந்து வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றிப் பள்ளியின் மருத்துவர் டாக்டர் ஆர்.முருகேசன் விளக்கினார்.

பள்ளியின் மாணவர் உளவியல் ஆலோசகர் சங்கீதா, மாணவ மாணவியர்களுக்கு அவ்வப்போழுது வழங்கப்படும் உளவியல் சார்ந்த அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பற்றிப் பேசினார். பள்ளியின் கல்வி ஆலோசகர் டாக்டர் கணேசன், பள்ளி செயல்படுகின்ற விதம், பள்ளியின் விதிமுறைகள் மற்றும் மாணவ மாணவியருக்கு, கற்றல் விளையாட்டு போன்ற பல துறைகளில் பள்ளியில் வழங்கப்படுகின்ற வாய்ப்புகளை எவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கான வழிமுறைகளைப் பெற்றோர்களுக்குக் கூறினார்.

பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தனது தலைமையுரையில், ‘‘தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், இளம் பருவத்தினருக்கு நமது பண்பாட்டையும் காலாச்சாரத்தையும் கற்றுக்கொடுக்கின்ற உயரிய நோக்கில் இப்பள்ளியை உருவாக்கினார். உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கிப் பயில்கின்ற மாணவ மாணவியர், சுயமாகத் தங்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்ளுதல், தங்களுடன் தங்கிப் பயில்கின்ற மாணவ மாணவியருடன் இணக்கமாக இருத்தல், உதவுகின்ற மனப்பான்மை, சகோதரத்துவம் ஆகியனவற்றை இளம் வயதிலேயே பெறுகின்றனர்.

மாணவ மாணவியர் ஒவ்வொருவரும் உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, மனவளர்ச்சி, ஆன்மிக அறிவு ஆகிய அனைத்தையும் பெற்று உயர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிக் கொடுக்கின்ற வகையில் பள்ளி செயல்பட்டு வருகின்றது. குழந்தைகளை நல்வழியில் நடத்திச் செல்வதற்குப் பெற்றோர்களின் பங்கு முதன்மையானதாக விளங்குகின்றது. தற்காலக் குழந்தைகளைப் புரிந்துகொண்டு அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதற்கு வழிகாட்டுகின்ற நோக்கத்தில்தான் பெற்றோர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது’’ என்றார்.

தொடர்ந்து, பள்ளியில் புதிதாகச் சேர்ந்த மாணவ மாணவியர், கடந்த எட்டு நாட்களில் தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள், மற்றும் கற்றுக்கொண்ட தனித்திறன்களைப் பற்றிப் பெற்றோர்களுக்கு விளக்கியுரைத்தனர். தாங்கள் வரைந்த ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர். அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாகப் புத்தாக்கப் பயிற்சிக்கு வருகை தந்திருந்த பெற்றோர்களைப் பள்ளி முதல்வர் டாக்டர் உமாமகேஸ்வரி வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் முனைவர் சக்திவேல் நன்றி கூறினார்.