என்.ஐ.ஏ. கல்வி நிறுவனத்தில்  சர்வதேச மகளிர் தின விழா 

என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் சார்பாக சர்வதேச மகளிர் தினம் மற்றும் யுவசக்தி விருது வழங்கும் விழா டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்துப் பேசுகையில், காவிய கலாச்சாரத்திற்கும் மனித உயிரியலுக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பை விளக்கினார். மேலும் பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவதில் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  தலைசிறந்த தலைமையை மேற்கோள் காட்டி, பெண்களின் சமத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர்  சிவசங்கரி ஆண்டு அறிக்கை வழங்கினார்.

ஆண்டுதோறும் வழங்கி வரும் ‘யுவசக்தி விருதினை’ இந்த ஆண்டு  தொழில் மற்றும் சமூகம் சார்பான துறைகளில் ஒப்பற்ற சேவையாற்றி வரும் கோயம்புத்தூர் பாவை இன்ஃப்ரா ஜியோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முதன்மை இயக்குநர் பிரசன்ன ராகிணிக்கு வழங்கப்பட்டது.

விருது  ஏற்புரை வழங்கிய பிரசன்ன ராஹினி, பாவை இன்ஃப்ரா ஜியோடெக் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், தனது வணிக வாழ்க்கையின் வெற்றியைப் பற்றியும் விளக்கிப் பேசினார். அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பணிபுரியும் பெண்களின் விகிதத்தை முறையே 30% மற்றும் 13% என ஒப்பிட்டு உரையாற்றினார்.

தொடர்ந்து, கோயம்புத்தூர் சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியை சாந்தாமணி மகளிர் தின விழா பேருரை நிகழ்த்தினார்.

மேலும், யுவசக்தி மகளிர் நலச் சங்கத்தின் மூலம் திரட்டப்பட்ட ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபாய் தொகையினைக் கொண்டு வருடந்தோறும் என்ஐஏ கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கும் மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

இதில், என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன், செயலர் இராமசாமி, யுவசக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ருக்மணி இராமசாமி, எம்.சி.இ.டி முதல்வர் கோவிந்தசாமி, என்பிடி  அசோக், என்ஐஏ பள்ளிகளின் நிர்வாக அலுவலர் சின்னசாமி மற்றும் கோவை கஸ்தூர்பா காந்தி காது கேளாதோர் பள்ளி மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.