ஸ்ரீ ராமகிருஷ்ணா  கல்லூரியில்  மகளிர் தின கொண்டாட்டம் 

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்,  மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில், சர்வதேச மகளிர் தின விழா  கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை முதன்மை நிர்வாக அலுவலர் ஸ்வாதி ரோஹித் தலைமை வகித்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். மகளிர் மேம்பாட்டு மையத் தலைவர் கவிதா ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராகக் கோவை வருமானவரி துணை ஆணையர் ப்ரயதி சர்மா கலந்து கொண்டு மகளிர் மேம்பாட்டு மைய சாதனை மலரை வெளியிட்டு பேசியதாவது; “இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் என்ற சொல்லை இந்த சமுதாயம் எதிர்மறையாகப் பார்த்த நிலை மாறி, அனைவரும் போற்றும் நிலைக்கு உயர்ந்துள்ளது நம்மை பெருமை கொள்ள வைக்கிறது.

பெண்கள் முதலில் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் எத்தகைய நெருக்கடியான சூழலையும் எதிர்கொள்ள முடியும். பெண்கள் வருமானம் ஈட்டுவதில் சுதந்திரமாக இருக்க வேண்டும். அதைக் கொண்டு தங்களுக்கான தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.  சொந்தமாக முடிவெடுக்கவும் பழகிக் கொள்ளுங்கள். உங்களுக்கான வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்”  என்றார்.

அதைத்தொடர்ந்து மகளிர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் மகளிர் மேம்பாட்டு மைய செயலர் ரேகா, பொருளாளர் வித்யா, மாணவத் தலைவர் நிரஞ்சனா, மாணவச் செயலர் ஸ்கேர்லெட் ஸ்டீபன், பேராசிரியைகள், மாணவிகள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.