ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கல்வி நிறுவன ஒருங்கிணைப்பு மையம் தொடக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், உள் தர மதிப்பீட்டு மையம் (ஐ.கியூ.ஏ.சி.) சார்பில், தொழில்துறை மற்றும் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பு மைய தொடக்கவிழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.

கோவை ரூட்ஸ் இண்டஸ்டிரீஸ் இந்தியா நிறுவன இயக்குநர் மற்றும் மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளி செயலர் கவிஞர் கவிதாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தொழில்துறை மற்றும் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பு மையத்தைத் தொடங்கி வைத்து, அதற்கான சின்னத்தை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

வாழ்க்கையை மாற்றி விட முடியுமா? முடியும். இது என்ன வாழ்க்கை? என்று எதிர்மறையாக நினைத்தால் தான் விரக்தி ஏற்படும். இது என்னுடைய வாழ்க்கை என்று நேர்மறையாக எண்ணினால் தான் வாழ்க்கைச் சிறப்பாக அமையும். வளர்ந்த பாரதம், வளமான பாரதம், ஒளிமயமான பாரதம் உருவாக தொழில்துறையும், கல்வி நிறுவனங்களும் ஒருங்கிணைய வேண்டும். தொழில் நிறுவனங்களில் வேலைக்குப் படித்த இளைஞர்கள் தேவையில்லை. வேலையைப் படித்த இளைஞர்கள் தான் தேவை.

படித்துக் கொண்டே, இது சார்ந்த வேலையையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இன்று உள்ளது. தொழில் நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதற்குத் தகுதியான இளைஞர்கள் தான் குறைவாக உள்ளனர்.

தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதி என்பது ‘த’ன்னம்பிக்கை, ‘கு’றிக்கோள், ‘தி’றமை ஆகிய மூன்றைத்தான். நீங்கள் வேலையைத் தேடிச் செல்லாமல், வேலை உங்களைத் தேடி வர தகுதியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து தொழில்துறை மற்றும் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பு மைய சின்னம் மற்றும் வாசகம் உருவாக்கிய மாணவர்கள் ரொக்கப்பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர். பின்னர், மாணவர்களின் கேள்விகளுக்குக் கவிஞர் கவிதாசன் பதிலளித்தார். இதற்கான ஏற்பாடுகளை உள் தர மதிப்பீட்டு மைய (ஐ.கியூ.ஏ.சி.) ஒருங்கிணைப்பாளர்கள் பர்வீன் பானு, கிருஷ்ணபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.