உலக தாய்மொழி தினம்; உலக சாதனை நிகழ்ச்சி! நீதிபதி முகமது ஜியாவுதீன் பங்கேற்பு!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பாக இணையதள வழியாக பன்னாட்டுக் கருத்தரங்க உலக சாதனை நிகழ்ச்சியினை பிப்ரவரி 18 ஆம் தேதியன்று இந்திய நேரம் காலை 9.30 மணி முதல் இரவு 11.30 மணிவரை தொடர்ந்து 14 மணிநேரம் சிறப்பாக நடைபெற்றது.

40 நாடுகளைச் சேர்ந்த 82 க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், தொழிலதிபர்கள், துணைவேந்தர்கள், நீதிபதிகள், தமிழ்ச் சங்கத் தலைவர்கள், பேராசிரியர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களது வாழ்த்துச் செய்தியுடன், வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி. சந்தோஷம் நிகழ்ச்சியினை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜா.குமார், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.பஞ்சநாதம், ஆகியோர் விழாப் பேருரை ஆற்றினார்கள்.

நிறைவு விழாவில் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதியும் தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினருமான அ. முகமது ஜியாவுதீன். தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். அவரது முன்னிலையில் அஸிஸ்ட்வேர்ல்ட் ரிக்கார்ட் நிறுவனர் முனைவர் இராஜேந்திரன் உலக சாதனைச் சான்றிதழை வழங்கினார்.

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தொடர்ந்து 5 வது முறையாக இந்த உலக சாதனை நிகழ்ச்சி நடந்துள்ளது சிறப்புக்குரியது. விழாவில் நாதஸ்வரம், இன்னிசை, கரகாட்டம், மயிலாட்டம் மற்றும் பொம்மலாட்டம் போன்ற தமிழ்ப் பண்பாட்டுக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்த உலக சாதனை நிகழ்வினை கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஆ. முகமது முகைதீன் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் போ.சத்தியமூர்த்தி அவர்களும் இணைந்து ஒருங்கிணைத்தனர். இந்த நிகழ்வை தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் கீதா ஸ்ரீராம், தொகுத்து வழங்கினார்.