கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் விருது வழங்கும் விழா

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை இலக்கிய மன்றம் மற்றும் ஸ்ரீ அருணாச்சலா கல்வி அறக்கட்டளை ஆகியோர் இணைந்து தேசிய மாணவர் படை (என்.சி.சி.  அதிகாரிகள்) பயிற்று  ஆசிரியர்களுக்கு ‘வீரமாராயம் விருது 2024’  வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவினை கோவை விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம், சுமதி ஆச்சி ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தனர்.

விழாவிற்கு தலைமை தாங்கிய  ஸ்ரீஅருணாச்சலா கல்வி அறக்கட்டளைத் தலைவர் அருணாசலம் பேசுகையில் “கல்விக்கும் தொழிலாளர் நலனுக்கும் துணைநிற்கும் கே.பி.ஆர். கல்விக்குழுமம் எங்களது  கலை, இலக்கிய, சமூகப்பணிகளுக்குப் பெரிதும் துணை நின்றிருக்கிறது. இதற்காக இக்கல்லூரி நிர்வாகத்திற்கு வாழ்த்துகளையும் விருதுபெற வந்துள்ள என்.சி.சி. அதிகாரிகளுக்குப் பாராட்டையும் தெரிவித்தார்.

கல்லூரிச் செயலாளர் இராமசாமி பேசுகையில் “தேசிய மாணவர் படையின் அதிகாரிகளை மேலும் சிறப்பாகச் செயல்பட ஊக்கப்படுத்திட ‘வீரமாராயம் விருது’ வழங்கும் விழாவை  மதுரை இலக்கிய மன்றம் மற்றும் ஸ்ரீ அருணாச்சலா கல்வி அறக்கட்டளை ஆகியோருடன்  இணைந்து  நடத்துவதில் பெருமையடைகிறோம்” என்றார்.

மதுரை இலக்கிய மன்றத்தின் நிறுவனரும் பட்டிமன்ற நடுவருமான அவனிமாடசாமி வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் விருதினை வழங்கி பாராட்டுரை நிகழ்த்தியபோது “தேசிய மாணவர் படையினுடைய முக்கியத்துவம் குறித்தும் அவர்களின் தியாகத்தைக் குறித்தும் பாராட்டி பேசினார். மேலும் தேசிய மாணவர் படை பயிற்று  ஆசிரியர்களினுடைய ஒப்பற்ற பணியையும் பாராட்டி பேசினார்.

இவர்கள் மாணவர்களிடம் நல்லொழுக்கத்தையும் நாட்டுப்பற்றையும் விதைத்து வருகிறார்கள், இவர்கள  ஊக்கப்படுத்திடப் பண்டைத்தமிழர் காலத்தில் மிகச்சிறந்த போர்வீரர்களுக்கு வழங்கப்பட்ட “வீரமாராயம்” எனும் பாராட்டுச் சொல்லினை மீட்டுருவாக்கம் செய்து அதன் பெயரில் வீரமாராயம் விருதினை ஏற்படுத்தியுள்ள மதுரை இலக்கிய மன்றத்தைப் பாராட்டியதோடு  இவ்விருதானது என்.சி.சி. அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்கான சிறந்த அங்கீகாரமாகும்” என்றார்.

விழாவில் பங்கேற்ற கோவையின் தொழிலதிபர்களான வெங்கட்கிருஷ்ணா, பாலசுப்பிரமணியம், ராமமூர்த்தி, லட்சுமிபதி, தமிழ்ச்சான்றோர்கள் அறக்கட்டளைத் தலைவர் ராஜதுரைவேல் பாண்டியன், பொள்ளாச்சி அரிமா சங்கத்தலைவர் விமலேஷ்சண்முகம், நினைவாற்றல் கலை பயிற்சியாளர் பெர்னாட்ஷா, வருங்கால வைப்புநிதி அலுவலக தொழிற்சங்கச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து விருது பெற்றோரைப் பாராட்டி  இயகோகா சுப்பிரமணியம் உரையாற்றினார்.

மதுரை இலக்கிய மன்றத்தின் செயலாளர் சிலம்பரசன் நன்றியுரை வழங்கினார்.