திருவேங்கடசாமி சாலை

ஆர்.எஸ். புரத்தில் ஒரு கிராஸ் கட் சாலை உள்ளது. (காந்திபுரத்தில் உள்ள கிராஸ் கட் சாலை அல்ல) ஆர்.எஸ். புரம் திவான் பகதூர் சாலையில் ஒரு போக்குவரத்து சிக்னல் உள்ளது. அந்த சிக்னலில் இருந்து கிழக்கு மேற்காக தடாகம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை இரண்டையும் குறுக்கு வெட்டாக இணைத்துச் செல்லும் அகலமான, நீளமான சாலைதான் இது. இதன் பெயர் திருவேங்கடசாமி சாலை ஆகும்.

ஏ.டி. திருவேங்கடசாமி முதலியார், கோவை நகரமன்றத் தலைவராக 1900 முதல் 1909 வரை பொறுப்பு வகித்தார். பெரிய செல்வந்தர். பல தொழில்கள் நடத்த வந்தவர். டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் சர்ச் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு மேற்கில் அமைந்துள்ள நூற்றாண்டு கண்ட பழங்கால மாளிகையில்தான் இவர் வசித்தார். (சில காலம் முன்பு வரை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி இங்கு இயங்கி வந்தது)

இவரின் மறைவிற்கு பிறகு இவரது புதல்வர்கள் இவருக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க எண்ணினர். அக்காலத்தில் கடிகார கூண்டு கட்டிடங்கள் புகழ்பெற்றிருந்தன. கோவையிலும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வனக்கல்லூரி, ரசு பொறியியல் கல்லூரி, ஜி.டி.நாயுடு அருங்காட்சியக கட்டிடம் என்று பல இடங்களில் இந்த மதிக்கூண்டுகள் உள்ளன. அதைப்போல் ஒரு மதிக்கூண்டுதான் திருவேங்கடசாமி முதலியாரின் நினைவாக டவுன்ஹால் பகுதியில் நகரின் மையத்தில் அமைக்கப்பட்டது. இன்றளவும் அப்பகுதி மணிக்கூண்டு என்றே வழங்கப்படுகிறது. அந்த மணிக்கூண்டின் முன்பாக திருவேங்கடசாமி முதலியாரின் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டது. தற்போது அது அங்கிருந்து அகற்றப்பட்டது. அவரின் பெயரால், அதாவது ஏ.டி.திருவேங்கடசாமி முதலியாரின் இனிஷியல் மற்றும் பெயரின் முதல் எழுத்தும் சேர்ந்துதான் தற்போது இந்து பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள ஏ.டி.டி. காலனி ஆகும்.

அவரின் நினைவாகத்தான் ஆர்.எஸ். புரத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான இந்த சாலைக்கு திருவேங்கடசாமி சாலை என்று பெயர் வழங்கப்படுகிறது. ஆர்.எஸ். புரத்தில் திருவேங்கடசாமி சாலை, திவான் பகதூர் சாலை இரண்டும் சந்திக்கும் இடத்தில் தான் போக்குவரத்து சிக்னல் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தான் ஆர்.எஸ். புரத்தின் தலைமை அஞ்சல் நிலையம், மாநகராட்சி கலையரங்கம், காமாட்சி அம்மன் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில் ஆகியன அமைந்துள்ளன. இவையின்றி இன்னும் பல அதிக அலுவலக வளாகங்களும் இந்த திருவேங்கடசாமி சாலையில் உள்ளது.