இந்தியாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் இடைக்கால பட்ஜெட்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை வரவேற்று நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான ஆசிஷ்குமார் சவுகான் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டிற்கு 10க்கு 10 மதிப்பெண் வழங்குகிறேன். இந்த பட்ஜெட் வரவு செலவுத் திட்ட வளர்ச்சி, நலவாழ்வு மற்றும் நிதிக் கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் கொள்கைகள் மற்றும் வரிவிதிப்புகளின் தொடர்ச்சியை உறுதி செய்கிறது. சிறப்பான உள்கட்டமைப்புகள் மற்றும் அதன் விளைவாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

மேலும் இந்த பட்ஜெட்டானது ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த பட்ஜெட்டாக இருப்பதோடு, நமது நிலையான எதிர்காலத்திற்கான சிறந்த பட்ஜெட்டாகவும் உள்ளது. 2023-24 நிதி ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பீட்டில் இருந்து 10 அடிப்படைப் புள்ளிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இது 5.8 சதவீதத்தில் இருந்து நிதி ஆண்டு 2024-25ல் 5.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2025-26ம் நிதியாண்டில் எதிர்பார்ப்புகளை மேம்படுத்துவதோடு 4.5 சதவீத இலக்கை அடைவதற்கான உறுதி அளிக்கிறது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மூலதன செலவினங்களைப் பொறுத்தவரை இது 16.9 சதவீதம் அதிகரித்து ரூ.11.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதத்தைக் குறிக்கிறது. இது 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சாலைகள், போக்குவரத்து மற்றும் ரயில்வேயில் அதிக கவனம் செலுத்துகிறது.

இது கடந்த ஐந்தாண்டு காலத்தில் 27 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக் குறிக்கிறது. செலவினங்களின் தரமும் மேம்பட்டுள்ளது, மூலதனச் செலவினம் இப்போது மொத்தச் செலவில் 23.3 சதவீதமாக உள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாகும். மின்சாரம், சுகாதாரம், வீட்டுவசதி, சமையல் எரிவாயு மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றுடன் கூடிய சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு இன்று ஏழை மக்களிடமும் சென்றடையும் வகையில் உள்ளது. இது அனைவருக்கும் சாதகமான சிறந்த பட்ஜெட்டாகும் என்று தெரிவித்தார்.