குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட பரூக் அப்துல்லா மறுப்பு

“எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட நான் விரும்பவில்லை” குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மறுப்புத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில்  எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட பரூக் அப்துல்லா மறுப்புத் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ம் தேதி முடிவடைகிறது.

இதனைத்தொடர்ந்து , நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், தேர்தல் நடைபெறாமல், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். தேர்தல் நடைபெற்றால், குடியரசுத் தலைவரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுப்பர்.

கடந்த 15 ம் தேதி, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக, டெல்லியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்க வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தலைமையில், எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.

இந்தக்  கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பெயர் குடியரசுத் தலைவர் பொது வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதற்கு, சரத் பவார் மறுப்புத் தெரிவித்தார். அவரைத்  தொடர்ந்து, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மறுப்புத் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட நான் விரும்பவில்லை. ஜம்மு காஷ்மீர் மிகவும், இக்கட்டான சூழலை கடந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்த நிச்சயமற்ற சூழலில், ஜம்மு காஷ்மீருக்கு எனது உதவி தேவையென கருதுகிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.