இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 3 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8000 தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரத்திலிருந்து இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 8 ஆம் தேதி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,233 ஆக இருந்த நிலையில், ஜூன் 9ம் தேதி 7,240 ஆகவும், நேற்று பாதிப்பு எண்ணிக்கை 7,584 ஆக பதிவானது. இந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் நேற்றைய தினம் தொற்று பாதிப்புக்கு ஆளாகி 24 பேர் உயிரிழந்திருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 4,216 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,48,308 ஆக உயர்ந்துள்ளது.