எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் விளையாட்டு விழா

வாழ்வில் சரியான பாதையை தேர்ந்தெடுப்பது முக்கியம்

– கர்னல் சந்திரசேகர்

டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23 வது விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் அனிதா அனைவரையும் வரவேற்று பேசினார்.

கல்லூரியின் உடற்கல்வித் துறை இயக்குனர் தீபா விளையாட்டு அறிக்கையில் கூறியதாவது: கல்லூயில் மாணவர்களுக்காக விளையாட்டு துறையில் உள்ள வசதிகள் பற்றிக் கூறினார். மேலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற இக்கல்லூரியின் மாணவர்களை பாராட்டினார்.

விளையாட்டு துறையில் கல்லூரி மாணவ, மாணவிகளின் சாதனைகள் பற்றி கூறிய அவர், மாநில, மாவட்ட, சர்வதேச அளவிலான போட்டிகளில் கல்லூரி படைத்த சாதனை குறித்தும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களின் பெயர் பட்டியலை நிகழ்வில் வாசித்தார்.

நிகழ்வில் எஸ்.என்.எஸ் கல்வி குழுமங்களின் சி.இ.ஓ டேனியல் தலைமை உரை வழங்கி பேசுகையில்: விளையாட்டு தினம் என்பது வீரர்களை பாராட்டியும், ஊக்கப்படுத்தும் தினம் ஆகும்.

கல்விக்கு தரும் முக்கியத்துவம் போலவே விளையாட்டுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். இதனை அரசும், கல்லூரியும் இன்னும் திறம்பட செயல்படுத்த வேண்டும்.

விளையாட்டு ஒருவருக்கு பல பலன்களை தரும். உடலை ஆரோக்கியமாகவும், கட்டமைப்புடனும், மன நலனையும் தரும் ஒன்றாகவே உள்ளது. மேலும் இந்த துறை நிறைய வாழ்க்கை பாடங்களை ஒருவருக்கு கற்று தரும். இன்னும் வலிமை கொண்டவராக நம்மை மாற்றும்.

மற்ற மாணவர்களுடன் ஒப்பிடும் போது, விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு பொறுப்பும், ஒழுக்கமும் அதிகபடியாக இருக்கும் எனப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, மேலாண்மை துறை இயக்குனர் ஞானசேகரன் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர், கர்னல் சந்திரசேகர் (Commanding officer, 2 Tamilnadu Battalion NCC, Coimbatore) தனது சிறப்புரையில், மாணவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்களோ அது தான் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் இடும். மாணவர்கள் சரியான பாதையை தேர்ந்தெடுப்பது முக்கியம். இது போன்ற கல்லூரி காலம் மீண்டும் திரும்பி வராது என தெரிவித்த அவர், நாட்டின் எதிர்காலம் மாணவர்களாகிய நீங்கள் தான் எனவும் கூறினார்.

சரவணம்பட்டி E 3 காவல் நிலைய ஆய்வாளர் முத்தமிழ் செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் திறன் முக்கியம். அப்போது தான் மனதை ஒருமுகப்படுத்த முடியும். நோய் நொடி இல்லாமல் இருந்தால் தான் பல செயல்களை செய்ய முடியும் என்றார்.

கல்லூரி படிப்பு முடிந்த உடன் வேலை தேடி அலைவதில் நாட்களை வீணாக்குகிறோம். சில நாட்கள் இது தொடர்ந்தால் சலிப்பும், சோர்வும் ஏற்பட்டு விடும்.

ராணுவம் மற்றும் காவல் துறையில் பல வேலை வாய்ப்புகள் உள்ளது. விளையாட்டு இதற்கு ஒரு கருவியாகவும், நுழைவு வாயிலாகவும் விளங்குகிறது.

அரசு வேலை பெறுவது என்பது குதிரை கொம்பாக இருக்கும் இந்த காலத்தில் எளிமையாக வேலை வாய்ப்புகளை கைப்பற்றக்கூடிய துறையாக உள்ளது.

கல்லூரி படிப்பு முடிந்த உடன் வாழ்க்கையில் அடுத்த கட்டம் என்ன என்பதைப் பற்றி யோசிப்பதை விட படிக்கும் போதே அது குறித்து யோசிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஒழுக்கம் மற்றும் தியாகம் இவை இரண்டின் மூலம் ஒருவர் தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருக்க வேண்டும் என்றும், அந்த பழக்கம் வாழ்வை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் என்றும் பேசினார்.

கல்லூரி மாணவர்கள் வழக்கு தொடர்பாக காவல் நிலையங்களுக்கு செல்லக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர். பின்னர் ஓட்டுமொத்தமாக வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.