கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது அவசியம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொது மக்கள் முகக் கவசம் அணிவது அவசியம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாயிரத்திற்கும் கீழாக பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவலின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து கூறியுள்ளதாவது: உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் டெல்லி, உத்தரப்பிரதேசம் மராட்டியம், கேரளா போன்ற மாநிலங்களில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் அந்த மாநிலங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி ஒன்றிய அரசு கடிதம் எழுதி உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு பொறுத்த வரையில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முகக் கவசம் அணிவது அவசியமாகும். தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவது விலக்கிக் கொள்ளப்படவில்லை. அபராதம் இல்லை என்பது மட்டுமே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தை பொறுத்த வரையில் பதட்டமான சூழ்நிலை இல்லை என்றாலும் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். கடந்த ஒரு மாதமாக 0 என்ற அளவில் தமிழ்நாட்டில் இறப்பு சதவீதம் உள்ளது என தெரிவித்துள்ளார்.