பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு பொருட்கள் தொகுப்பு: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறம் பவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ஹெச்.சி.எல் அறக்கட்டளை இணைந்து, மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன், “உடல்நல மற்றும் மனநல பாதுகாப்பு” திட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு “சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு” வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அறம் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் லதா சுந்தரம், சரவணன் குமார், ஹெச்.சி.எல் அறக்கட்டளையின் அலுவலர் ஜனனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அறம் பவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட், ஹெச்.சி.எல் அறக்கட்டளை உடன் இணைந்து மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன், 2021 முதல் 2022 ஆம் ஆண்டுக்கான “உடல்நல மற்றும் மனநல பாதுகாப்பு” திட்டத்தின்கீழ் சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதற்கு மாநகராட்சி பகுதிகளில் உள்ள 3 பள்ளிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள 7 பள்ளிகள் என மொத்தம் 10 பள்ளிகளிலிருந்து தலா 15 மாணவர்கள் வீதம் 150  மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இச்சத்துணவு தொகுப்பில் பச்சை பயிறு, சிவப்பு அரிசி, கொள்ளு, காபூல், வெள்ளை சுண்டல், தட்டைப் பயிறு, பாதாம், சோயா, அவல், கருப்பு சுண்டல், பேரிச்சம்பழம், பச்சை பட்டாணி, முந்திரி, தினை (ராகி, கம்பு, சாமை, வரகு) மற்றும் அத்தி போன்றவை  உள்ளன.