டாஸ்மாக் டெண்டர் போராட்டம்: தவறான தகவலை பரப்புவதாக அமைச்சர் பதில்

டாஸ்மாக் பார் டெண்டர் கிடைக்காதவர்களே விரக்தியில் தவறான தகவலை பரப்புவதாக கோவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்

கோவை இராமநாதபுரம் பகுதியில் திங்கட்கிழமை நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முதலமைசர் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இதனைதொடர்ந்து சென்னைக்கு அடுத்த படியாக அதிக குடும்ப அட்டை உறுப்பினர்கள் கொண்ட கோவையில் இத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளேன் என்றார்.

உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்ட விவசாயிகள் நிலத்திற்கான இழப்பீட்டை தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் விபரங்களை கொடுத்தால் இழப்பீடு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

டாஸ்மாக் பார் டெண்டர் போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டாஸ்மாக் டெண்டரில் பார் கிடைக்காதவர்கள் விரக்தியில் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என கூறினார். பார் நடத்தும் வசதி இருந்தும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்கள் டெண்டர் விடப்படாமலே சிலர் நடத்தி வந்தனர் எனவும் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய நிலையில் அவைகள் எல்லாம் முறைப்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

மேலும் கோவையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த கேள்விக்கு, ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படியே நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.