கே.பி.ஆர் கல்லூரியில் ‘ஆரோக்கிய சந்தை’

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின்  ஸ்கூல் அஃப் மேனஜ்மென்ட் சார்பில் ஆரோக்கிய சந்தை என்ற இரண்டு நாள் (நவம்பர் 4 மற்றும் 5) எக்ஸ்போ நடைபெறுகிறது. 50 ஸ்டால்களை உள்ளடக்கிய இந்த சந்தையில் பலவகையான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி. ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்வை துவக்கி வைத்து அனைத்து ஸ்டால்களையும் பார்வையிட்டார்.

இது குறித்து கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி கூறுகையில்: கே.பி.ஆர் கல்லூரியில் நடைபெறும் ஆரோக்கிய சந்தை எக்ஸ்போ வாயிலாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும் என்பது தான் இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம்.

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களை அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக இந்த இரண்டு நாள்  எக்ஸ்போ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற எக்ஸ்போ மூலம் இத்துறை சார்ந்த மாணவர்களுக்கு தொழில் முறை குறித்த புரிதல்கள் உண்டாகும். எதிர்காலத்தில் மாணவர்கள் ஒரு சிறந்த தொழில்முனைவோராகவும் திகழ்வதற்கு இம்மாதிரி நடத்தப்படும் நிகழ்வுகள் வழிகாட்டியாக அமையும்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது, வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளும் போது தான் சமுதாயத்தில் ஒரு முழுமையான மனிதனாக தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்” என்பது தான் கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி. ராமசாமி அவர்களின் எண்ணமாகும் என்பதையும் குறிப்பிட்டு பேசினார்.

இந்நிகழ்வில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் அகிலா, ஸ்கூல் அஃப் மேனஜ்மென்ட் டீன் ஷியாம் சுந்தர், கே.பி.ஆர் மில் பணியாளர்கள் கல்வி பிரிவு முதல்வர் சரவணபாண்டி, துறைத்தலைவர் ஹேமலதா, உதவிப் பேராசிரியர் ராஜேஸ்வரி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.