சமூக இடைவெளி கொரோனா பரவலைத் தடுக்காது – ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கி 2 ஆண்டுகள் முடிவடையைப் போகிறது. பல மாத ஊரடங்கு, பாதுகாப்பு நடைமுறைகள், மற்றும் தடுப்பூசிகள் வந்துவிட்ட நிலையிலும் இன்னும் கொரோனா தொற்று அச்சுறுத்தக் கூடியதாகவே இருக்கிறது.

மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் சமூக விலகல், மாஸ்க் அணிதல் என்ற இரண்டும் கட்டாயமாக்கப்பட்டன. வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில், கைகளை கழுவுவது மற்றும் வீடு மற்றும் சுற்று வட்டாரத்தை சுத்தமாக வைத்திருப்பது ஆகியவை மீது அதிக கவனம் இருந்தது. ஆனால், காற்றிலும் இந்நோய் பரவுவது தெளிவான பின் பாதிக்கப்பட்ட நபர் பேசும் போது, இரும்பும் போது அல்லது தும்பும் போது வெளியாகும் டிராப்லெட்கள் வழியே காற்றில் கலந்து பிறருக்கும் தொற்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்காது என்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்து கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டி பொறியாளர்கள் குழு ஒன்று காற்றில் கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பது பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தது. அந்த ஆய்வில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர் மாஸ்க் அணியவில்லை என்றால் அவர் இரண்டு மீட்டர் தொலைவில் இருந்தாலும் அவர் மூலம் பிறருக்கு தொற்று பரவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒருவர் இருமல் அல்லது தும்மலின்போது பேசுவது மூலம் வெளியாகும் ஒவ்வொரு துளி எச்சிலும் காற்றில் என்ன ஆகிறது என்பது குறித்த ஆய்வும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு முறை இருமும்போதும் வெவ்வேறு அளவிலான டிராப்லெட்கலை வெளியிடப்படுகிறது எனபது கண்டறியப்பட்டது. இரண்டு அல்லது மூன்று மீட்டர் இடைவெளி என்பது பாதுகாப்பானதாக இருந்தாலும் அது 100% பாதுகாப்பானது அல்ல. எனவே சமூக இடைவெளி மட்டும் போதாது. தடுப்பூசி மற்றும் மாஸ்க்குகள் பயன்படுத்துவது, குளிர்காலத்தில் தொற்று அதிகரிக்காமல் அபாயத்தை குறைக்கும் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.