தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் தகவல்

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வேளாண் அமைச்சர் எம்.ஆ.கே. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி, வெங்காயம் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி ஒரு கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தக்காளி விலை உயர்வை உடனடியாக அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறியதாவது: தக்காளி விலையை கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும், வரத்து வரக்கூடிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் பதுக்கலில் ஈடுபட்டு மேலும் விலை உயர்வதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். வெகு விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

உழவர் சந்தை திட்டத்தை மேம்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது, சந்தைக்கு அருகே உள்ள பகுதியிலே காய்கறி உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தியான காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வரவும் வாகன ஏற்பாடு செய்யப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.