சேற்றில் வழுக்கி விழுந்த யானையின் உடல்நலம் பாதிப்பு! மருத்துவர்கள் சிகிச்சை!

கோவையில் கடந்த 6ம் தேதி சேற்றில் வழுக்கி விழுந்த யானை மீட்கப்பட்ட நிலையில் தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 6ம் தேதி கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் உள்ள தடாகம் காப்புக்காடு நாய்க்கன்பாளையம் அருகே இருக்கும் சிறிய பள்ளத்திற்குள் மழை ஈரத்தில் ஆண் யானை ஒன்று வழுக்கி விழுந்தது. இந்த தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக களப் பணியாளர்கள் உடனடியாக சென்று பொக்லைன் உதவியுடன் பள்ளத்தை சீர்படுத்தினர்.

தொடர்ந்து யானைக்கு முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் கோவனூர் கால்நடை உதவி மருத்துவர் வெற்றிவேல் ஆகியோர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் யானை இயந்திர உதவியால் தானாக எழுந்து புதர்ப்பகுதிக்குள் சென்றது. இதை களப்பணியாளர்கள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் அந்த யானை இன்று காலை 7.00 மணியளவில் வனப்பகுதிக்கு வெளியே சுமார் 250 மீட்டர் தொலைவில் உள்ள பட்டா நிலத்திற்குள் வந்தது. உடல் நிலை மோசமான அந்த யானை அங்கேயே படுத்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த யானைக்கு தற்போது முதுமலை வனக் கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.