அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என்று தனி வார்டு – டீன் நிர்மலா தகவல்

கோவை மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என்று பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் சுமார் இரண்டு வார காலமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

பருவமழையால் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது: பருவ மழையையொட்டி காய்ச்சலுக்கு என சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மருந்து இருப்புகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பரிசோதனை கருவிகள் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்து சரியாக செயல்படுகிறதா? என கண்டறிந்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் தனிச்சையாக மருந்துகளை வாங்கி சாப்பிடக் கூடாது. உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். தற்போது காய்ச்சல் நோயாளிகளுக்காக சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக அறைகள் ஒதுக்கப்பட்டு கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.