பாரம்பரியமும் பண்பாடும் நமது அடையாளம்!

மோகன் சந்தர், பள்ளி தாளாளர், நேஷனல் மாடல் ஸ்கூல்ஸ்

பண்டிகைக் காலம் அடுத்தடுத்து வரத் தொடங்கி நம்மை மகிழ்விக்க வரிசையாகக் காத்திருக்கிறது. கடைவீதி கூட்டங்களும், புத்தாடைகளும், பட்டாசு சத்தங்களும், இனிப்புகளும் தீபாவளியை வரவேற்க ஆயுத்தமாகிக் கொண்டிருக்கின்றன. ஓரளவு கட்டுக்குள் வந்த கொரோனா தொற்றினால் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடமுடிகிறது.

இந்தக் கொரோனா தொற்றின் போது நாம் கடந்து வந்த பாதைகள், வாழ்வில் கொண்டாட்டங்கள் எவ்வளவு அவசியம் என்பதையும், உறவுகளின் மேன்மையையும் நமக்கு எடுத்துக் கூறியுள்ளன. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பியதைப் போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தியுள்ளது இந்த தீபாவளி பண்டிகை.

இந்தியா பன்முக கலாச்சாரத் தன்மையைக் கொண்டுள்ளதோடு அதன் பாரம்பரியத்திற்க்கென தனிச்சிறப்பு உண்டு. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இதன் தனித்துவமாகவும் உள்ளது. ”ஒரு மாணவன் நாட்டின் மீது பற்றுக் கொண்டவனாகவும், சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாகவும் இருப்பதற்கு, பள்ளியில் இருந்தே அதற்கான பண்புகளைக் கற்றுத் தர வேண்டியது அவசியம்” எனக் கூறுகிறார் மோகன் சந்தர்.

மேலும் அவர் கூறுகையில், பல்வேறு மதங்கள் ஒருங்கிணைந்து பலதரப்பட்ட கலாச்சாரங்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அனைத்து மதத்திலும் உள்ள பொதுவான பண்டிகை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அதை அவர்களுக்கு கற்றுத் தரும்போது தான், நம் பழமையான பாரம்பரியம் பற்றிய புரிதல் உண்டாகும் என்கிறார்.

பழமையைப் போற்றிக் கொண்டாடுதல்:

நம் நாட்டின் பாரம்பரியத்தையும், கலாச் சாரத்தையும் இன்றைய தலைமுறை மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று. பண்டிகையை கொண்டாடுவதற்கு காரணம் என்ன? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன? போன்றவற்றை மாணவர்கள் அறிய வேண்டும் என்பதற்காக எங்கள் பள்ளியில் மதம் சார்ந்த பண்டிகை தினங்கள் கொண்டாடப் படுகிறது. மேலும் அவர்கள் பழமையை மறந்து விடக் கூடாது என்ற நோக்கத்திலும் இது போன்ற கொண்டாட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

மதம் சார்ந்த பண்டிகையோடு நின்றுவிடாமல், மாணவர்கள் கிராமிய வாழ்வு முறையையும், அங்கு இருக்கக் கூடிய கலாச்சாரத்தையும் கற்றுத் தரும் வகையில் நம்ம கிராமம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் மூலம் கிராமம் போன்ற அமைப்பை பள்ளியில் ஏற்படுத்துகிறோம். இந்நிகழ்ச்சி கொண்டாடக் காரணம், நகரத்தில் வசிக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு கிராமங்களும், அங்கு இருக்கும் வாழ்க்கை முறையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே தான், கிராமியச் சூழல் அனுபவத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.

இதுபோன்ற நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை மற்றவர்களுக்கு உதவிடும் விதமாக பயன்படுத்துகிறோம். உதாரணமாக, கோவை கேன்சர் பவுண்டேஷன் அமைப்பிற்கு எங்கள் மாணவர்களின் சார்பில் ஆம்புலன்ஸ் அளித்து உதவினோம். இதன் மூலம் மாணவர்களுக்கு சிறு வயதில் இருந்தே பிறருக்கு உதவும் மனப்பான்மை வளருவதோடு, எதிர்காலத்தில் இந்த சமூகத்தில் சிறந்த மனிதனாகவும் விளங்குவார்கள்”. இயலாதவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்வதே மனிதநேயம் என்ற உணர்வு சிறு பிராயத்தில் இருந்தே குழந்தைகளுக்கு வரவேண்டும்.

இங்கு பயிலும் மாணவர்களின் தாத்தா, பாட்டிகளுக்கு என தனி ஒரு தினம் கொண்டாடப்படுகிறது.

அவர்களை மகிழ்விக்கும் வகையில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் அவர்களுக்குள் உறவு மேம்படுவதோடு, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மீது பெற்றோர்களுக்கு புரிதல் ஏற்படும்.

உற்சாகமும், ஈடுபாடும்:

நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. ஒரு வருடங்களுக்கும் மேலாக பள்ளிக்கு வரமுடியாமல், இணைய தளம் வழியாக கல்வி பயின்று உள்ளனர். எனவே அவர்களுக்கு உடனடியாக பாடத்தை நடத்தாமல், ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் ஈடுபடும் வகையில் சில பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும். அதற்கு அடுத்தபடியாகத் தான் பாடங்களைக் கற்றுத் தர முடியும். மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு வருவதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தரவேண்டும்.

கவனமும் அவசியம்:

இந்த தீபாவளி பண்டிகையை ஆர்ப்பாட்டத்துடனும், ஆரவாரத்துடனும் கொண்டாட நாம் அனைவரும் எதிர் நோக்கிக் காத்திருக்கிறோம். பண்டிகைக் கால கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து விடவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதோடு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. இது போன்ற பண்டிகை சமயங்களில் அவர்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும்.