வானுக்கு வழிகாட்டி: சர்வதேச விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தினம்

விமானங்கள் பாதுப்பாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்றடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏ.டி.சி எனப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அக்டோபர் 20 ஆம் தேதி உலக வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

இது குறித்து கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறுகையில்: மனிதன் ‘ சக்கரம் ‘ கண்டுபிடித்த காலம் தொடங்கி, பயணம் என்பது மனித வாழ்வின் பரிணாம வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்துள்ளது. ஆரம்ப காலங்களில் வான் வழிப்பயணம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே என்ற நிலை மாறி இன்று சாமானிய மக்களும் தாம் விரும்பிய இடங்களுக்கு சில மணி நேரத்தில் சென்றடையக்கூடிய அளவிற்கு கடந்த சில ஆண்டுகளில் முன்னேறியுள்ளது.

நாள்தோறும் லட்சக்கணக்கானோர் விமான சேவையை பயன்படுத்துகின்றனர். விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானமானது ஓர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பத்திரமாக தரையிறக்க வேண்டியது அவசியமாகிறது . மேலும் வானில் பறக்கும் விமானத்தின் வேகம் சராசரியாக நிமிடத்திற்கு 8 முதல் 12 கி.மீ வரை உள்ளதாலும் , பரந்து விரிந்த வானில் பல விமானங்கள் பறக்கும் சூழ்நிலை உள்ளதாலும் வான்வழி போக்குவரத்து என்பது சற்றே சவாலானதாகும் . விமானத்தில் பயணம் செய்யும் அனைவரும் விமானியை தான் முழுமையாக நம்பி உள்ளனர் .

இத்தகைய சவால்கள் நிறைந்த சூழலில் விமானிகள் நம்புவது ஏர் டிராபிக் கண்ட்ரோலர் ( ஏ.டி.சி ) எனப்படும் வான் போக்குவரத்துக்கு கட்டுப்பாட்டாளர்களை தான், உலகின் அனைத்து விமான நிலையங்களிலும் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவு கட்டாயம் இருக்கும். இங்கு அமர்ந்து கொண்டுதான் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமான நிலையங்களிலும், வானத்திலும் விமானிக்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.

மேலும் விமானங்கள் குறித்த நேரத்தில் பயண இலக்கை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாமல் அடைவதிலும், போக்குவரத்து சீராவதிலும், இடர்பாடுகள் அல்லது பாதகமான சூழ்நிலைகளில் இருந்து மீட்பதிலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளிலும் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் பணியாக உள்ளது.

விமானத்தை எப்பொழுது இயக்க வேண்டும்? எப்பொழுது தரையிறக்க வேண்டும்? எப்பொழுது ஓடுதளத்தை பயன்படுத்த வேண்டும்? எந்த வேகத்தில் விமானத்தை இயக்க வேண்டும்? எவ்வளவு உயரத்தில் பறக்க வேண்டும்? என்பவை போன்ற பாதுகாப்பு குறித்த அனைத்து செயல்படுகளுக்கும் விமானியானவர் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியின் அனுமதி பெற்ற பின்னரே இயக்க முடியும் என்பது விதி. இதற்காக ரேடார் போன்ற பல தொழில்நுட்பக் கருவிகளின் துணை கொண்டு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.