கத்தோலிக்க சிரியன் வங்கி ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்த போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் கத்தோலிக்க சிரியன் வங்கி ஊழியர்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் இயங்கிவரும் கத்தோலிக் சிரியன் வங்கி ஊழியர்கள் வங்கியின் முன்பாக நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு அனைத்து வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், ஆனால் கத்தோலிக்க சிரியன் வங்கி ஊழியர்களுக்கு மட்டும் இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் குற்றம் சாட்டினர்.

இதுதொடர்பாக இரண்டு கட்டமாக வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் தற்போது மூன்றாம் கட்டபோராட்டமானது நாடுமுழுவதும் நடைபெற்று வருவதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் கேரளாவை தலைமை இடமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி, கேரளா மக்களின் பணத்தை பெற்றுக்கொண்டு, கனடா நாட்டின் பன்னாட்டு நிறுவனம் 51 சதவிகித பங்குகளை கையில் வைத்துக்கொண்டு, மக்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் துரோகம் இழைத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

தற்காலிக தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை உடனே அமுல்படுத்த வேண்டும் மற்றும் வங்கி நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடப்பதாகவும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.