வெற்றி தரும் விஜயதசமி!

அம்பிகையின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும் நம் வாழ்வின் வெற்றிப் படிக்கட்டில் முன்னேற  உகந்த நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை, விஜயதசமி விழாக்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழாவாக 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் இறுதி மூன்று நாட்களில் கல்வி அறிவு, கலை ஞானங்களை வேண்டி சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர்.

தமிழகத்தில் விஜயதசமி அன்று, மழலைக் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடனப் பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழில் தொடங்குவது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதற்கு முந்தைய நாளான நவமியில் சரசுவதியை வணங்கி கல்வி, கலை கருவிகளுக்கு பூஜை  நடத்தி தசமி அன்று ஆயுதபூஜை என தாங்கள் பயன்படுத்தும் தொழிற்கருவிகளுக்கும் வாகனங்களுக்கும் பூஜை நடத்துகின்றனர்.

விஜயதசமி அன்று தொடங்கப்படும் எந்த ஒரு செயலுக்கும் வெற்றி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க திட்டமிட்டுள்ள பெற்றோர் கோவிலுக்கு அழைத்து வந்து  நாக்கில் எழுத்துக்களை எழுதியும், பின்னர் குழந்தைகளை நெல்லில் உயிர் எழுத்துக்களை எழுத வைப்பதும் வழக்கத்தில் உள்ளது.  இதனை வித்யாரம்பம் (வித்யா – அறிவு, ஆரம்பம் – தொடக்கம்) எனக் கூறுகிறோம். விஜயதசமி நாளன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி பல்வேறு கோவில்களிலும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.இத்தகைய சிறப்புமிக்க வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை நவஇந்தியா கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் வருடந்தோறும் விஜயதசமி நாளில் நடைபெறுகிறது.  இக்கோவிலில் அமைந்துள்ள  ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இக்கோவிலின் சிறப்பம்சமாக கல்விக்கு அதிபதியாக திகழக் கூடிய ஹயக்ரீவர் மற்றும் அவரின் சீடரான சரஸ்வதி தேவி இருவரும் ஒரே சன்னிதானத்தில் காட்சி தருகின்றனர்.

மேலும் வேறு எங்கும் இல்லாத வகையில் சரஸ்வதி சிலை ஒரே கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது இரு அடையாளமாக திகழும் புத்தகமும் வீணையும் தனியாகப் பிரிந்து  இல்லாமல் சரஸ்வதி தேவியின் சிலை உடனே ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இது போன்ற தனித்துவம் மிக்க விக்கிரகம் தற்போது இக்கோவிலில் மட்டும் தான் அமைந்துள்ளது.

மேலும் இந்த கோவிலில் வலம்புரி கற்பக விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கந்தசுவாமி, பார்வதி பரமேஸ்வரர், லலிதாம்பிகை, மேகநாத சுவாமி, நந்திகேஸ்வரர், நவகிரகங்கள், பைரவர், தக்ஷிண மூர்த்தி, துர்கை, ஐயப்பன், தன்வந்திரி, நரசிம்மர் மற்றும் மஹாலக்ஷ்மி, ராமர் சீதை லட்சுமணர், கருடன், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ஆண்டாள் ஆகிய தெய்வங்களும் இடம்பெற்றுள்ளனர்.

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு மிக்க நாளில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் வரும் விஜயதசமி அன்று (15.10.2021) காலை 8 மணிக்கு வித்யாரம்பம் பூஜைகள் நடைபெற உள்ளன. மேலும் இந்த நன்னாளில் ஸ்ரீ லலிதாம்பிகை அம்மனுக்கு நெய்குள தரிசன பூஜை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.