“கோவையில் 2 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடவில்லை”

கோவை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கோவையில் கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் 4,41,000 நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும், இதில் மாநில அளவில் கோவை மாவட்டம் சிறந்து செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 25,63,212 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும் 92,22,000 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அதே சமயம் இரண்டு லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தவில்லை. நாளையும் 1425 முகாம் அமைக்கப்பட்டு மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும் 2 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களைப் பொறுத்தவரை இரண்டு தவணைத் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டதற்கான சான்று அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட RTPCR நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கோவை மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கேரள எல்லைகளை ஒட்டியுள்ள மலைவாழ் மக்கள் இருக்கும் பகுதிகளில் செயல்படும் பள்ளிகளில் வாரம் ஒருமுறை மாணவர்களுக்கு RTPCR பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் சாலையோரம் வசிப்பவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் தொற்று முழுமையாக ஒழியவில்லை என்று கூறிய அவர் மக்கள் இதனை மனதில் வைத்துக் கொண்டு இனிவரும் பண்டிகைகளை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும். அரசின் உத்தரவுக்கிணங்கவே வழிபாட்டுத் தலங்களுக்கு பண்டிகை நாட்களில் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று காலங்களில் கடன் தொல்லைகள், வியாபார பாதிப்பு ஆகியவையால் தற்கொலைகள் அதிகமாக நடைபெறுவதாகவும் அதனை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மையம் செயல்படுவதாகவும் தெரிவித்தார். இக்கால கட்டங்களில் கடனை திருப்பி செலுத்துவதற்கு மக்களுக்கு கால அவகாசம் தர வேண்டும் என நிறுவனங்களிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார்.