நீண்ட இழை பருத்தி வகைகளுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு – சைமா கோரிக்கை

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) 62 ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் சைமாவின் தலைவராக கோவை அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட்ன் நிர்வாக இயக்குனர் ரவி சாம், துணைத்தலைவராக கோவையில் செயல்படும் சிவா டெக்ஸ்யார்ன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் சுந்தரராமன், உபத்தலைவராக ஈரோட்டில் செயல்படும் பல்லவா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் பழனிசாமி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரவிசாம் பேசுகையில்: சைமா ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்தி கழகங்களுடன் இணைந்து பணியாற்றி இந்திய ஜவுளித் தொழில் பயன் அடையும் வகையில் செயல்பட்டு வரியில்லா ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தியா பல்வேறு நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தங்கள் ஏற்படுத்தியுள்ளபோதும் பல்வேறு வெளிநாட்டு கொள்கைகளால் இந்தியாவிலிருந்து ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கவில்லை.

ஏழுவகை நூல்களை தவிர, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பிற நூல்களுக்கு 5 % வரியுள்ளதாகக் கூறினார். இந்திய துணிகள் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மற்றும் விலக்களிக்கப்பட்ட பட்டியலில் உள்ளதாகவும் அவற்றிற்கு முறையே ஐந்திலிருந்து ஆறு மற்றும் 12 % சதவீத வரி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், செயற்கை இழை பஞ்சினை சார்ந்த ஜவுளித்துறையை 5 % ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவரும்படியும், மத்திய அரசு மிக நீண்ட இழை பருத்தி வகைகளுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.