தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா!

கோவையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி அருகே தனியார் செவிலியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து விடுதியில் தங்கி படிக்கின்றனர்.

இந்த நிலையில், அவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து நேற்று மற்ற மாணவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது கேரள மாணவர்களுடன் தொடர்பில் இருந்த 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கல்லூரி வளாகத்திலேயே செயல்படும் கொரோனா முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கலை அறிவியல், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

கோவையில் தொற்றின் தாக்கம் அதிகரித்திருந்த சூழலில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்த சூழலில், தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே வெளி மாநிலங்களில் இருந்து கல்லூரிகளுக்கு படிக்க வரும் மாணவர்கள் கட்டாயம் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்தினர் கல்லூரி நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளனர்.