கண்களில் பிளேடு, தலையில் தீக்கரகம் 15 நிமிடங்கள் ஐஸ்கட்டி மீது நின்று மாணவி சாதனை

கண்களில் கூர்மையான பிளேடுகளுடன் ஐஸ்கட்டி மீது கால் முட்டிகளை வளைத்து நின்றபடி, தலையில் தீக்கரகம் இரு கைகளில் நெருப்பு சிலம்பத்தை தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் சுற்றி உலக சாதனை செய்து அசத்தியுள்ளார் கோவையைச் சேர்ந்த மாணவி.

கோவை செலக்கரசல் பகுதியை சேர்ந்த வீராசாமி, ஜெயந்தி தம்பதியரின் மகளான மோனிஷா கதிர் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் பயின்று வருகிறார். சிறு வயது முதலே நாட்டுப்புற கலைகளில் ஆர்வமுடைய மாணவி மோனிஷா, அதே பகுதியில் வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சி பள்ளியில் முறையாக சிலம்பம் பயின்று வருகிறார்.

இந்நிலையில் சிலம்பம் சுற்றுவதில் மாணவி மோனிஷாவின் உலக சாதனை நிகழ்ச்சி வீரத்தமிழன் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாணவியின் ஆசான் டாக்டர் கனகராஜ் மற்றும் ஐ.நா வின் இளைஞர் அமைப்பின் தூதுவர் டாக்டர் கலையரசன் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இதில் மாணவி மோனிஷா, ஐஸ் கட்டி மீது தனது கால்களை முட்டி போட்டபடி நின்று தலையில் தீக்கரகம் கண்களில் கூர்மையான பிளேடுகளுடன் தனது இரு கைகளில் நெருப்பு சிலம்பத்தை தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் சுற்றி உலக சாதனை படைத்தார்.

தற்காப்பு கலை மற்றும் கிராமிய கலைகளை இணைத்து செய்த இவரது இந்த சாதனை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. உலக சாதனை படைத்த சாதனை மாணவிக்கு வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சி பள்ளியின் நிறுவன தலைவரும் கலை பண்பாட்டு பிரிவின் தீர்ப்பாளருமான டாக்டர் கனகராஜ் மற்றும் கிராமிய புதல்வன் அகாடமியின் நிறுவனர் டாக்டர் கலையரசன் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்.