பருத்தி மீதான 1 % வரி நீக்கம்: சைமா சார்பில் முதல்வருக்கு நன்றி

பருத்தி விவசாய சந்தை வரியை நீக்க கோரி தமிழக விவசாயிகளும், ஜவுளித் துறையினரும் மாநில அரசை கோரி வந்த நிலையில் பருத்தி மற்றும் பருத்தி கழிவு பஞ்சின் மீதான ஒரு சதவீத விவசாய சந்தை வரி ரத்து செய்யப்படுகிறது என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய இந்திய ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார் மற்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் துணைத்தலைவர் ரவிசாம் ஆகியோர் தமிழக முதல்வருக்கு ஒட்டு மொத்த இந்திய ஜவுளித் தொழிலின் சார்பாகவும், தமிழக ஜவுளித் தொழிலின் சார்பாகவும் நன்றி தெரிவித்தனர்.

மேலும், இந்த வரி நீக்கத்தினால் தனியார் மற்றும் இந்திய பருத்திக் கழகம் தமிழகத்தில் கிடங்கில் பஞ்சை இருப்பு வைத்து அன்றாடம் சிறு மற்றும் குறு நூற்பாலைகளுக்கு விற்க முன்வருவர் என்றும், இதனால் இந்த நூற்பாலைகளின் நடப்பு மூலதனம் தேவை மற்றும் மூலப்பொருள் வாங்கும் நேரம் போன்றவை கணிசமாக குறைந்து போட்டி ஸ்திரன் அதிகரிக்கும் என்று கூறினர்.

ஒரு சதவீத பருத்தி கழிவு பஞ்சு வரி நீக்கம் ரோட்டார் நூற்பாலைகள், தங்களுக்குத் தேவையான கழிவு பஞ்சு முழுவதையும் தமிழகத்திலேயே வாங்க முடிவதால் மாநிலத்தின் ஜி.எஸ்.டி வரி வருவாய் கணிசமாக உயரும். நாட்டிலேயே அதிகமான மதிப்பு கூடிய ஜவுளிப் பொருட்களை தமிழக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், கழிவு பஞ்சிலிருந்து தயாரிக்கப்பட்ட நூலில் இருந்து உற்பத்தி செய்வதால் பன்னாட்டு ஜவுளி விற்பனையாளர்கள் தமிழகத்திற்கு அதிக வியாபாரத்தை கொடுப்பார்கள். இதனால் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி விற்பனைகள் கணிசமாக உயரும் எனத் தெரிவித்தனர்.