உறவுக்கு கை கொடுப்போம்! உரிமைக்கு குரல் கொடுப்போம்!!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வென்ற முதல்வர்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் டில்லி செல்லும் முதல் முதல்வர் என்றும் வைத்துக்கொள்ளலாம். சென்ற தேர்தலில் எதிர்கட்சியாக போட்டியிட்டாலும் தமிழக முதல்வர் என்ற அரசு தலைமைப் பொறுப்பின் சார்பாக டில்லி சென்று பிரதமரை சந்தித்து திரும்பி இருக்கிறார்.

பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலை, கலைஞர் கருணாநிதி இல்லாத குறை, மத்தியில் மாநிலத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி ஆட்சி என்ற பல சோதனைகளை கடந்து, துணிச்சலாக களம் கண்டு நல்ல முறையில் வியூகம் அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருக்கிறார். பதவி ஏற்ற உடனே பெரும் சோதனையாக  கொரோனா நோய் இரண்டாம் அலை பரவல் தமிழகத்தில் தீவிரம் அடைந்தது.

ஆக்சிஜன் இல்லை, மருத்துவமனையில் இடமில்லை என்று நிலைமை மோசமானது. இன்னொரு புறம் அரசின் நிதி நிலை அவ்வளவு திருப்தியாக இல்லை. என்றாலும் மனம் தளராமல் தனது புதிய அமைச்சரவை சகாக்களுடன் களத்தில் இறங்கி பணி புரிந்து வருகிறார். அதில் ஓரளவு நிலைமை சீராகி உள்ளது. கோவைக்கு மட்டுமே இரண்டு முறை வருகை தந்து பணிகளை முடுக்கி விட்டார்.  இந்த நிலையில் தான் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் அவர்களின் டில்லி பயணம் அமைந்துள்ளது. அங்கும் அவரது தனி அணுகுமுறையை கைவிடவில்லை. பிரதமருடனான இருபத்து ஐந்து நிமிட சந்திப்பில் இருபத்து ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முன்வைத்து இருக்கிறார்.

எதிர்கட்சியாக போட்டியிட்ட ஸ்டாலின் மத்திய அரசுடன் எதிரி கட்சியாக செயல்படுவார், மோதல் போக்கை கடை பிடிப்பார் என்பதை பொய்யாக்கி அரசியல் முதிர்ச்சி உடன் செயல்பட்டு இருக்கிறார்.  பெரும்பாலும்  தேர்தலுக்கு முன்னர் அவர் சொல்லி வந்த கோரிக்கைகள் தான் என்றாலும் இந்த முறை சொல்லியிருப்பது தமிழக முதல்வர் என்பது இங்கு முக்கியம். பல கோரிக்கைகள் மத்திய ஆளும் கட்சியின் கொள்கைகளுக்கும் ஆட்சிக்கும் பிடித்தமானது அல்ல என்பதை அவர் அறிவார். என்றாலும் தமிழக மக்களின் நலன் கருதி இந்த கோரிக்கைகளை முன்வைத்து இருக்கிறார்.

இதில் நீட் தேர்வு ரத்து, ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து போன்றவை மத்திய அரசுக்கு எதிராக ஒரு தோற்றத்தை தந்தாலும் ஜி.எஸ்.டி வரித்தொகை அளித்தல், செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பது போன்றவை மாநில அரசாங்கத்திற்கு பலம் சேர்ப்பதோடு , எதிர்கால வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கியம் ஆகும்.  அந்த வகையில் மத்திய, மாநில அரசுகளின் உறவில் ஒரு புதிய வழித்தடத்தை உருவாக்கி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பந்தை எடுத்து எதிரணியின் எல்லைக்குள் போட்டு இருக்கிறார்.

சிலரைப் போல மத்திய அரசு சொல்வதற்க்கெல்லாம் ஆமாம் சாமி என்று தலையாட்டாமல், ஆனால் அதே நேரத்தில் மம்தா பானர்ஜி போல தீவிர எதிர்ப்பு போக்கையும் கடை பிடிக்காமல் ஒரு நடுநிலையான, முதிர்ச்சி உடன் அவரது முதல்வர் பயணம் தொடங்கி இருப்பதாகவே தோன்றுகிறது.  அதைத்தான் உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்த அவரது டில்லி பயணம் காட்டுகிறது.