கொங்கு மண்டலம்: உதயநிதிக்கு சவாலா?

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, வாரிசு அரசியல் சுழலில் சிக்காத  அரசியல் கட்சிகளே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது.  வாரிசு அரசியல் குறித்து வாய்கிழிய கத்தும் அரசியல் கட்சிகளே குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு அதே வாரிசு அரசியலில் சவாரி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றன.

வாரிசு அரசியலுக்கு திமுகவும் விதிவிலக்கு அல்ல.  திமுக தலைவராக மு.கருணாநிதி இருக்கும்போதே மு.க.ஸ்டாலின் கட்சிக்குள் நுழைந்தாலும்,  கோபாலபுரம் பகுதி திமுக இளைஞர் அணியை 1967ல் தொடங்கியது, பின்னர் 1973ல் திமுக பொதுக்குழு உறுப்பினர்,  நெருக்கடி காலத்தில் மிசா சட்டத்தின்கீழ் கைது,  1982ல் மாநில இளைஞர் அணி செயலர்,  1984ல் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தது,  பின்னர் 1989  பேரவைத் தேர்தலில் வெற்றிப்பெற்றது,  1996ல் சென்னை மேயர்,  2006ல் துணை முதல்வர்,  பின்னர் கட்சியில் பொருளாளர், 2016ல் பேரவை எதிர்கட்சித் தலைவர், இப்போது முதல்வர் என கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்குப்பின் அரசியலில் உச்ச நிலையை அடைந்துள்ளார்.

இதற்கிடையே கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி, கட்சியில் தென்மண்டல பொறுப்பாளர்,  மத்திய அமைச்சர் என உயர் பதவிகளை பெற்றப்பின்னரும் கட்சிக்குள் தாக்குப்பிடிக்க முடியாமல் கருணாநிதியே அவரை கட்சியில் இருந்து வெளியேற்றும் சூழல் உருவானது.  கருணாநிதியின் மகள் கனிமொழி,  மாநிலங்களவை உறுப்பினர்,  மகளிர் அணி செயலர்,  தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் என படிப்படியாக வளர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கருணாநிதியின் பேரனும்,  முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தீவிர அரசியலில் இறங்கியிருப்பது திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்த அதிகார மையமாக மாறப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. திரைப்பட நடிகர்  என்பதால் மக்கள் சக்தியை எளிதாக திரட்டும் திறன்,  எளிய மக்களிடம் அவர்கள் மொழியிலேயே பேசும் திறன்,  அரசியல் களத்தில் எதிராளிகளை கேள்விக்கனைகளால் எளிதில் மடக்கும் திறன் உள்ளிட்டவை உதயநிதியை அரசியல் வானில் ஜொலிக்க வைத்துள்ளது.

2006 பேரவைத் தேர்தலில் தனது தந்தை ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டபோது அத்தொகுதியில் முதல் முறையாக பிரசாரம் செய்தார்  உதயநிதி ஸ்டாலின்.  பிறகு 2011, 2016தேர்தல்களிலும் தனது தந்தைக்காக பிரசாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி.  திமுக கட்சிப் போராட்டத்தை பொருத்தவரை 18.4. 2018 ல்  நடந்த காவிரி பிரச்சனை தொடர்பாக விவசாயிகள் போராட்டத்தில் முதல்முறையாக பங்கேற்றார்.

பின்னர் 2019 மக்களவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.  குறிப்பாக வட மாவட்டங்களில் பிரசாரம் செய்யும்போது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,  அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை கடுமையாக தாக்கி பிரசாரத்தில் ஈடுபட்டார்.  வன்னியர்கள் ஒரு திரண்ட சமுதாயம் என்பதால் ராமதாஸை தேர்தல்களத்தில் பொதுவாக, மற்ற அரசியல்வாதிகள் அவரை எதிர்த்து விமர்சனம் செய்ய அச்சப்படுவதுண்டு. ஆனால், ஜெயலலிதா பாணியில் துணிச்சலுடன் ராமதாஸையும்,  அன்புமணி ராமதாஸையும்  கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி.  இதன் விளைவு,  வடமாவட்டங்களில் தலித்கள், பிற்பட்டோர் வாக்குகள் திமுகவுக்கு ஆதரவாக திரண்டது.  பாமகவுக்கு எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் (உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விழுப்புரம் மக்களவை உறுப்பினர் விசிக ரவிக்குமார்) உள்பட 7 பேரும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றனர்.

மக்களவைத் தேர்தலில் ஸ்டாலின் வியூகத்தை வடமாவட்டங்களில் சிறப்பாக செயல்படுத்திய உதயநிதிக்கு வெகுமதி அளிக்கும் வகையில் திமுக மாநில இளைஞர் அணி செயலர் பதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து கிராமசபை கூட்டங்களை உதயநிதி நடத்தி மக்கள் மனதை நெருங்கத் தொடங்கினார்.  2021 பேரவைத் தேர்தலில் ‘விடியலை நோக்கிய பயணம்’ என்னும் தலைப்பில் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி.

இதற்கிடையே கட்சியின் மாவட்டச் செயலரை நியமிப்பதிலும் உதயநிதி தனது ஆளுமையை செலுத்தத் தொடங்கினார்.  இதனால்,  ஆயிரம் விளக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த கு.க.செல்வம் திமுகவில் இருந்து வெளியேறி, பாஜகவில் ஐக்கியமானதால், தனது விசுவாசியான சிற்றரசுவுக்கு சென்னை மேற்கு மாவட்டச் செயலர் பதவியை பெற்றுத்தந்தார் உதயநிதி. அதேபோல, திருச்சி மாவட்ட அரசியலில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கைஓங்கும் வகையில் அவருக்கு மாவட்டச் செயலர் பதவியை பெற்றுக்கொடுத்து கே.என்.நேருவுக்கு முதன்மைச் செயலர் பதவியை பெற்றுக்கொடுத்து மாநில அரசியலுக்கு கொண்டுவருவதற்கு காரணமாக இருந்தார்.

இப்போது கட்சி விளம்பரங்களில் ஸ்டாலின் படத்துடன்  உதயநிதி படம் இல்லாத போஸ்டர்கள், விளம்பரங்கள் இல்லை என்ற அளவுக்கு கட்சியிலும்  அதிகார மையமாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளார் உதயநிதி.  2021 பேரவைத் தேர்தலில் தனது தாத்தா கருணாநிதியின் ஆஸ்தான தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பாமக வேட்பாளர் கசாலியை தோற்கடித்து 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

திமுக வெற்றிப்பெற்றதும் உதயநிதி அமைச்சராக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  கட்சிப்பணியில் அவரை தீவிரமாக களமாடவைக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவே தகவல்கள் வருகின்றன.  தான் அமைச்சராக வாய்ப்பு இல்லாத நிலையில்,  தனது நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை விடாப்படியாக அமைச்சராக்க முயற்சி செய்து வெற்றிப்பெற்றுள்ளார் உதயநிதி.

மக்களின் நம்பிக்கையை பெற்றால் தான் கட்சியில் முக்கிய பொறுப்புகளை பெற முடியும் என்பது ஸ்டாலினுக்கு, கருணாநிதி கற்றுக்கொடுத்த பாடம். அதே பாடத்தை தான் தனது மகன் உதயநிதிக்கு,  ஸ்டாலின் இப்போது கற்றுக்கொடுத்து  வருகிறார்.  இதனால் திமுக மிகவும் பின்தங்கியிருக்கும் கொங்கு மண்டலத்தில் கட்சியை வளர்க்க உதயநிதிக்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனால், அடிக்கடி இப்போது கொங்கு மண்டலத்தில் உதயநிதி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். வடமாவட்டங்களில் துரைமுருகன், எவ.வேலு, க.பொன்முடி,  தாமோ.அன்பரசன்,  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  எஸ்.எஸ்.சிவசங்கர்,

தென்மாவட்டங்களில் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திண்டுக்கல் ஐ.பெரியசாமி, ராஜ.கண்ணப்பன், பெரியகருப்பன்,  மூர்த்தி,  தங்கம் தென்னரசு, டெல்டாவில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் மக்கள் செல்வாக்கு மிக்க தளபதியாக திமுகவுக்கு இருக்கின்றனர். இதனால் அங்கு  ஒரு தேர்தலில் திமுக தோற்றாலும், அடுத்தத் தேர்தலில் மீண்டும் பீனிக்ஸ் பறவையாக மீண்டுவர முடிகிறது.

ஆனால், தொடர்ந்து பல தேர்தல்களில்   கொங்கு மண்டலத்தில் திமுகவால் எழுச்சி பெற முடியவில்லை.  அதற்கு இங்கு திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு மிக்க தளபதிகள் இல்லாமல் இருப்பது தான் காரணம்.  இப்போது தான் கரூரில் செந்தில்பாலாஜி,  ஈரோட்டில் சு.முத்துச்சாமி ஆகியோர்  உருவெடுத்துள்ளனர்.  நீண்ட காலமாக கோவை, ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்த தளபதிகளால் திமுக பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை என்ற கருத்து நிலவுகிறது.

எனவே,  கொங்கு மண்டலத்தில் மேலும் மக்கள் செல்வாக்கு மிக்க புதிய தளபதிகளை திமுக உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.  அந்த முயற்சிக்கான தலைமைப் பொறுப்பை உதயநிதி ஸ்டாலின் ஏற்று அதற்காக கொங்கு மண்டலத்தில் தீவிரமாக களமாடி வருகிறார். எதிர்வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை,  திருப்பூர்,  ஈரோடு,  சேலம் ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளை கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே திமுகவுக்கு புதிய தளபதிகளை உருவாக்க முடியும்.

இதற்காக சேலத்தில் செந்தில்பாலாஜி,  கோவையில் அர.சக்கரபாணி,  திருப்பூரில் வெள்ளக்கோயில் சாமிநாதன், ஈரோட்டில் முத்துச்சாமி ஆகிய  அமைச்சர்கள் உதயநிதிக்கு உறுதுணையாக களம் இறக்கப்பட்டு  அடிப்படை பணிகளில்  ஈடுபட்டுள்ளனர்.   சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மிருக பலத்துடன் இருக்கும் அதிமுகவை வெற்றிக்கொள்வது  உதயநிதியின் திறமைக்கு விடப்பட்ட சவாலாக இப்போது மாறியுள்ளது. இந்த சவாலில் வெற்றிப்பெற்றால் உதயநிதி கட்சியில் அடுத்தட்ட உயர் பதவியை உடனடியாக பெற வாய்ப்பாக மாறும்.  வாய்ப்பை வரமாக்குவாரா உதயநிதி?, ஓரிரு மாதங்களில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் விடை கிடைக்கும்.

பெட்டிச் செய்தி….

 திறமையை நிரூபிக்க அருமையான வாய்ப்பு

இது குறித்து இளம் அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது,  இளம் அரசியல்வாதியான உதயநிதியால் இளம் வாக்காளர்கள் முதல் முதியவர்கள் வரை எளிதாக கவர முடியும் என்பது பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் தெளிவாக தெரிந்தது.  மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி திறக்கவில்லை என்பதை எளிதாக புரிய வைக்கும் வகையில் தேர்தல் பிரசாரத்தில் ஒரு செங்கல்லை மட்டுமே எடுத்துவந்து எளியமொழியில் பேசி மக்களை கவர்ந்தார்.

கொங்கு மண்டலம் இயல்பாகவே திமுகவுக்கு 50 ஆண்டுகளாக சோதனையான மண்டலமாகவே இருந்து வருகிறது. இங்கு தேசிய, ஆன்மிக சிந்தனை கொண்ட வாக்குகள்  அதிகம் என்பதால் திமுக வளர்ச்சி தடைபட்டு நிற்கிறது.  உதயநிதி போன்ற இளம் அரசியல்வாதிகளை முன்னிறுத்தி இம்மண்டலத்தில் அரசியல் களமாடும்போது இங்குள்ள திமுகவுக்கு எதிரான மென்மையான இந்துத்துவா வாக்குகளை மட்டுப்படுத்தி,  திமுகவுக்கு ஆதரவாக திருப்ப முடியும்.  இதை செய்யக்கூடிய அளவுக்கு உதயநிதியும் புத்திசாலியான அரசியல்வாதிதான்.  இருப்பினும்,  கொங்கு மண்டலத்தில் உதயநிதி சாதிப்பாரா என்பதை காலம் தான் முடிவு செய்ய முடியும் என்றார் ரிஷி.

பெட்டி செய்தி

கோவையை வெல்லும் வியூகம்

தமிழகம் முழுவதும் திமுக வெற்றி பெற்றிருந்தாலும் கொங்கு மண்டலத்தில் திமுக பலவீனமாகவே உள்ளது. இதற்கு காரணம் கொங்கு பகுதியில் வெள்ளாள கவுண்டர்களுடன்  மொழிவழி சிறுபான்மையினர்களும் அதிமுகவுக்கு இந்த முறை பெரும்பான்மையாக வாக்களித்துள்ளனர்.

இந்த பகுதியில் உள்ள 64 இடங்களில் 22 இடங்களை மட்டுமே திமுக கைப்பற்ற முடிந்தது. குறிப்பாக கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. ஆகையால் தற்போது நடக்கவிருக்கும் நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலில் திமுக கோவை மாநகராட்சியை கைப்பற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.

கோவையை பொறுத்தவரை மொழிவழி சிறுபான்மையினர்களும் அதிமுகவுக்கு வாக்களித்து இருந்ததாலும் எஸ். பி வேலுமணியை கொறடாவாக நியமித்ததால் மறுபடியும் வெள்ளாள கவுண்டர்கள் மீது பிற சமூகத்தினருக்கு அதிருப்தி  உருவாக வாய்ப்பு உள்ளதாக கருத்து நிலவுகிறது. இதை பயன்படுத்தி வெள்ளாளக் கவுண்டர் அல்லாத நாயுடு, துளுவ வேளாளர், செங்குந்த முதலியார், யாதவர், 24 மனை தெலுங்கு செட்டியார், தேவர்  போன்ற சமூகங்களையும் அரவணைத்து அரசியல் செய்தால் அது கோவையில்  திமுகவை வலுப்படுத்த வாய்ப்பு உள்ளது.