கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி, உடற்பயிற்சி சாலையை திறந்து வைத்த பிக்பாஸ் ஆரி

கோவை போத்தனூர் சாலையில் “மஸ்கில் ஜோன் ஸ்டீபன் ஜிம்” என்ற உடற்பயிற்சி சாலையின் புதிய கிளை ஞாயிற்றுக்கிழமை (11.4.2021) துவங்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிக்பாஸ் ஆரி அர்ஜுனன் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி, உடற்பயிற்சி சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அங்கு உடற்பயிற்சி மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது திறப்பு விழா நிகழ்ச்சியாக இல்லாமல் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக உருவெடுத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

மேலும் கொரோனா தீவிரம் அடைந்துள்ளதால்  அனைவரும் தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள், கிருமிநாசினியை பயன்படுத்துங்கள், பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்தார்.பிக்பாஸ் வெற்றிக்குப் பின் முதல் முறையாக கோவைக்கு வந்துள்ளேன் எனவும் கோவை மக்கள் மறக்கமுடியாத அன்பை கொடுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களுக்கும், கமல்ஹாசனுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அதே சமயத்தில் மக்களுக்கான ஆட்சி அமைய வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உடற்பயிற்சி சாலையின் நிறுவனர் ஸ்டீபன் டானியல் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான மொய்தீன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.