காந்திபுரம் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கோவை மாநகராட்சி காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இன்று 10.4.2021 கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன், முகக்கவசம் அணியாமல் இருந்த 15 நபர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தும், பேருந்துகளில் பயணிகள் நின்று பயணித்ததால் 4 பேருந்துகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தார். மேலும், அப்பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ரெஸ்டாரென்டில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் அதன் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதித்தார்.

பின்னர், ஆணையாளர் தெரிவித்ததாவது, பொதுமக்கள் வெளியே செல்லும் போதும், பொது இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும், நோய் தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். இதனை கடைபிடித்து கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.